நாட்டில் உள்ள பாரிய வர்த்தகர்கள் பலரும் கோடிக்கணக்கில் அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலிருக்கின்றனர், அர்ஜூன அலோசியஸ் போன்று அவர்களும் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் ; அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத்

(எம்.மனோசித்ரா)
நாட்டில் பாரிய வர்த்தகர்கள் பலரும் கோடிக்கணக்கில் அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலிருக்கின்றனர். விரைவில் அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை (15) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் பாரிய வர்த்தகர்கள் பலரும் கோடிக்கணக்கில் அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலிருக்கின்றனர். அவ்வாறானவர்களில் ஒருவரே அர்ஜூன அலோசியஸ். அவர் 355 கோடி ரூபா வரி செலுத்தாமல் தவிர்த்திருக்கின்றார். தேசிய வருமான வரி திணைக்களத்தினால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அதற்கமையவே அவருக்கு 6 மாத கால சிறை தண்டனை வழங்கப்பட்டது. வரி செலுத்தாமல் இருந்தமைக்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பின் ஊடாக அரசாங்கத்துக்கு வர வேண்டிய அந்த 355 கோடி ரூபா கிடைக்கப்போவதில்லை.
இந்த பாரிய தொகையைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விரைவில் அதனை செய்ய நாம் எதிர்பார்த்துள்ளோம். இந்த விவகாரத்தில் நபர்கள் தொடர்பான தராதரம் இன்றி நடவடிக்கை எடுப்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. அது முறையான வழிமுறைக்கமைய முன்னெடுக்கப்படும் என்றார்.

