தூய அரசாங்கம் மாத்திரம் அல்ல தூய எதிர்க்கட்சியும் அவசியமானதே
-உதயசூரியன் கூட்டணி கண்டியில் தெரிவிப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரை நாடு புதியதாக தெரிவு செய்துகொண்டுள்ளது. இந்த மாற்றம் பாராளுமன்றத்திலும் பிரதிபலிக்க வேண்டும். அப்படியாயின் பாராளுமன்றமும் ஒரு தூய்மையான அரசாங்கத்தை நோக்கி அமைய வேண்டும் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அந்த பாராளுமன்றம் ஆளும் கட்சியினால் மாத்திரமே நடாத்தப்படக்கூடிய ஒன்று அல்ல. அங்கே பலமானதும் தூய்மையானதுமான எதிர்கட்சியும் வருகின்ற அமைகின்ற பட்சத்திலேயே இந்த நாடு எதிர்பார்க்கும் உண்மையான அரசியல் கலாச்சாரத்தை கண்டடைய முடியும். எனவே ஆளும் அரசாங்கத்தை உருவாக்குவதற்காக வாக்களிப்பதற்கு மாத்திரமல்லாது அத்தகைய அரசாங்கத்தை நெறிப்படுத்துவதற்கு உரிய தகுதியான தூய்மையான எதிர்க்கட்சி வரிசையை உருவாக்க வேண்டியதும் மக்களின் பொறுப்பு எனவே தூய்மையான அரசாங்கத்தை மாத்திரம் அல்ல தூய்மையான எதிர்க்கட்சி ஒன்றையும் உருவாக்குவதற்காக மக்கள் வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் கண்டி – நுவரெலியா மாவட்டங்களில் போட்டியிடும் ஐக்கிய கூட்டணி கட்சிகளான மலையக அரசியல் அரங்கமும் சமூக நீதி கட்சியும் கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தன.
இந்த ஊடக சந்திப்பில் மலையக அரசியல் அரங்கத்தின் செயல் அதிபரும் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளருமான மயில்வாகனம் திலகராஜா, சமூக நீதி கட்சியின் தலைவரும் கண்டி மாவட்ட தலைமை வேட்பாளருமான நஜா முஹம்மத் ஆகியோர் கலந்துகொண்டு தனது கருத்துக்களை தெரிவித்தனர்.
கூடவே இளம் வயது வேட்பாளரான செயிட் அஹமட் பல்கலைக்கழக மாணவராக தான், நுவரெலியா மாவட்ட வேட்பாளராக போட்டியிடுகின்றேன் என்பதையும் எதிர்க்கட்சி தலைவர் அவர்களின் பொறுப்பு மாற்று பிரதமராகவும் செயற்படும் தன்மை கொண்ட பாராளுமன்றம் அமைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.