News

கடந்த சில நாட்களாக இலட்சக்கணக்கான சிறிய கறுத்த மீன்கள் கிழக்கு கரைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது ஏன்? விளக்கம் தருகிறார் சிரேஸ்ட விரிவுரையாளர் ரியாஸ் அஹ்மட்

கடந்த சில நாட்களாக இலட்சக்கணக்கான சிறிய கறுத்த மீன்கள் கிழக்கு கரைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது ஏன்?

அறிமுகம்:
கடந்த சில நாட்களாக கிழக்குக் கரையோரங்களில் குறிப்பாக மட்டக்களப்பிலிருந்து கல்முனை வரை சிறிய கறுத்த மீன்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது மீனவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் வாதப் பிரதிவாதங்களையும், சில வகையான ஐயங்களையும் தோற்றுவித்துள்ளன.

இவ்வாறு மீன்கள் உயிருடன் கரையொதுங்குவதும், அல்லது உயிருடன் கரையொதுங்கி ஆயிரக் கணக்கில் இறப்பதும் அல்லது ஆயிரக்கணக்கில் இறந்து கரையொதுங்குவதும் ஒன்றும் புதிதல்ல. காலத்திற்கு காலம் ஒவ்வொரு 5-6 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.

மீனின் உயிரியல்:
Odonus niger என்ற விஞ்ஞான பெயரையுடைய, ஆங்கிலத்தில் redtoothed triggerfish என அழைக்கப்படும் பாலிஸ்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த இந்த மீன் இந்திய பசுபிக் பெருங்கடல்களில் வசிக்கின்றது. இந்த மீன்களின் மனநிலை, உணவு, உணவைப் பெறுதல், கடல் நீரின் பண்புகள் போன்றன மாறுபடும்போது ஊதா நிறத்திலிருந்து, நீலத்திற்கும், பின் நீலப் பச்சை நிறத்திற்கும் மாறக்கூடியன. தாவர பிளாந்தன்கள், விலங்குப் பிளாந்தன்கள் போன்றவற்றை உண்பதுடன் சில சமயங்களில் சிறிய மீன்களையும் உண்கின்றன.

முருகைக் கற்பாதைத் தொகுதியை வாழிடமாகக் கொண்ட இந்த மீனின் மொத்த நீளம் 11 சென்ரிமீற்றர். வால்வரை வரை நீளம் 8 சென்ரிமிற்றர். வாலின் நீளம் 3 சென்ரிமீற்றர். முதுகுப்பக்க செட்டை ஒரு பெரிய முள்ளு, 33 மென்முள்ளு. வாற்செட்டை 40 மென்முள்ளு, குதச் செட்டை 24 மென்முள்ளு, இடுப்புச் செட்டை 14 மென்முள்ளு போன்றவைகளுடன் காணப்படுகின்றது. நீருக்கு வெளியே வரும்போது அடர்ந்த கறுத்த நிறமாக காணப்படும் இம் மீன், நீருக்குள் ஊதா சார்ந்த கறுப்பு நிறமாக செட்டைகள் நீல நிறமாகவும், அதேவேளை வால் பகுதியின் இரு முனைப் பகுதிகளும் சிவப்பு நிறத்திலும் காணப்படுகின்றன. இந்த மேற்பக்க வாயையும் கொண்டு காணப்படுகின்றது. இந்த மீனை சாப்பிடலாமா? இல்லையா? என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும். எனினும் வீடுகளில் அலங்கார மீன்களாக வளர்க்கப்படக்கூடிய அளவு அத்தனை தகுதிகளையும் இந்த மீன்கள் கொண்டு காணப்படுகின்றது. இருந்தும் இயற்கையான கடற்பகுதியிலேயே இதன் இனப்பெருக்கம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கரையொதுங்குவதற்கான காரணங்கள்:
இவ்வாறு கடல் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதற்கு அல்லது கரையொதுங்கி இறப்பதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படலாம்.
1) நோய்த் தொற்று
2) காலநிலை மாற்றம்,
3) பிழையான அல்லது சட்டவிரோதமான மீன்பிடிமுறைகள் (டைனமைட், சயனைட் மீன்பிடி முறைகள்),
4) இயந்திரப் படகுகள், கப்பல்களிலிருந்து தவறுதலாகவோ அல்லது நோக்கமாகவோ கொட்டிவிடப்படும் இரசானப்பொருட்கள்,
5) கடலின் அடித்தளத்தில் புதைக்கப்படும் இரசாயன அணுக்கழிவுகள், இரசாயனக் கழிவுகள்,
6) ஆயுதங்களை பாவித்தல் அல்லது பரீட்சித்துப் பார்த்தல்
7) விலங்குகளின் அசாதாரண நடத்தைகள் அனர்த்தங்களுக்கான முன்னறிவிப்பு

இதற்குப் பொருத்தமான காரணம் எதுவென்று மேலோட்டமாக கூறிவிட முடியாது. மேலே கூறியதற்கு அப்பாலும் வேறு காரணங்களும் இருக்கலாம். அவைகள் ஆய்வுகளின் மூலமே நிருபிக்கப்பட வேண்டும்.

காலநிலை மாற்றம் காரணமென்றால், காலநிலை மாற்றம்தான் காரணம் என்ற இரு சொற்களை சொல்லிவிட்டு இலகுவாக சென்றுவிட முடியாது. சமுத்திரங்களின் மேற்பரப்பு நீரோட்டம் (10 சதவீதமான நீர் இதற்கு உட்படுகின்றது), கீழிருந்து மேற்பக்கமான நீரோட்டம் (மீதி 90 சதவீதம் நீர் இதற்கு உட்படுகின்றது. சமுத்திரங்களின் வெப்பநிலையை மாற்றுவதில் செல்வாக்கு செலுத்துவதும், மீன்களுக்கு அதிக போசணைப் பொருட்கள், உணவுகள் போன்றவற்றைத்; தாங்கிக் கொண்டு வந்து மீன்பிடியை அதிகரிக்கச் செய்வதும் இந்த நீரோட்டம்தான்), இந்த நீரோட்டங்களை உருவாக்கும் சூரிய வெப்பம், காற்று, புவியீர்ப்பு விசை, கொரியோலிஸ் விளைவு போன்றவைகளை வைத்துக் கொண்டு அதனால் சமுத்திரத்தின் வெப்பநிலை (ஒரு வேளை அதிகரிக்கலாம் அல்து குறையலாம்), உவர்த்தன்மை, அதனுடன் விலங்கு அலையுயிரின் அடர்த்தி, ஒட்சிசனின் அடர்த்தி, கடல் உயிரினங்கள் சமுத்திரத்தின் வாழும் பகுதிகள் (அடியில், நடுப்பகுதியில், மேற்பகுதியில்), மற்றும் அதன் உணவு முறைகள் போன்றவைகளும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.

இதனைத் தவிர மற்றையவைகளுக்கும் சாத்தியம் இல்லையென்று எதனையும் நிராகரிக்கவும் முடியாது.
கிழக்குக் கரைகளில் கடல் உயிரினங்கள் கரையொதுங்குவது போன்ற நிகழ்வுகள் இங்கு மட்டும் நடைபெறும் நிகழ்வுகள் அல்ல. கடந்த காலங்களில் அவ்வப்போதும், அண்மைய வருடங்களாக அடிக்கடியும் உலகின் பலபாகங்களிலும் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வுகளுக்கு நோய்கள் காரணமாக இருக்கலாம்.

வெப்பநிலை உயர்ந்து இருக்கலாம். வெப்பநிலை குறைந்து இருக்கலாம்.  குளிர் நீர் விளைவாயிருக்கலாம். அபாயகரமான கழிவுகள் கடல் அடித்தளங்களில் புதைக்கப்பட்டிருக்கலாம். தவறுதலாக கடலில் வெளிவிடப்பட்ட இரசாயனக் கழிவுகளாக இருக்கலாம் போன்ற உறுதிப்படுத்தப்படாத காரணங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் இது போன்ற நிகழ்வுகளுக்கு தெளிவான காரணங்களும்  முன்வைக்கப்படவில்லை. உறுதியான முடிவுகளும் முன்வைக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான ஊகங்களும், அனுமானங்களும், கொள்கைகளுமே முன்வைக்கப்படுகின்றன. இவைகள் எப்போதும் மர்மமாகவே இருக்கின்றன.

எனவே சரியான ஆய்வுகளினுாடாக விடையைத் தெரிவிப்பதுதான் இந்த நேரத்தில் நாம் செய்யக்கூடியதாகும். ஆய்வுகளின் மூலம் விடையைத் தெரிவிப்பதிலுள்ள பிரச்சினை என்னவென்றால் ஊடகப் போட்டி, ஊடகப் பிரபல்யம், நான் முந்தி நீ முந்தி போன்ற காரணங்களால் அறிக்கைகள் முந்திவிடுகின்றன.

இறுதியாக ஒருவிடயம், விலங்குகளின் அசாதாரண நடத்தைக்கும், இயற்கை அனர்த்தங்களின் முன்னறிவிப்பிற்கும் எப்போதும் தொடர்பு இல்லை அல்லது எப்போதும் தொடர்பு இல்லாமலும் இல்லை. ஆனால் இது சம்பந்தப்பட்ட ஆய்வுமுறைகள் இலங்கையில் இன்னும் வளரவில்லை. சீனா போன்ற நாடுகளில் வளர்ந்திருக்கின்றன. ஆனால் எல்லா அசாதாரண நடத்தைகளும் அனர்த்தத்திற்கான முன்னறிவிப்பு என்று கொள்ளமுடியாது. அசாதரண நடத்தைகளை விலங்குகள் காட்டினாலும் (உயிரியல்), மற்றைய துறைகளான வானிலையியல், காலநிலையியல், பௌதிகவியல், இரசாயனவியல், புவியியல் போன்ற துறைகளுடன் சேர்ந்த ஆய்வுகளின் மூலமே அதனை உறதிப்படுத்த முடியும்.

என்னைப் பொறுத்தவரை, இந்த அசாதாரண நடத்தை, சமீபகாலங்களில் உலகில் நடக்கும் சாதாரண நடத்தையில் ஒன்று என்று கருதிக்கொள்வது நன்று என நினைக்கின்றேன்.

ஏ.எம். றியாஸ் அகமட்
சிரேஸ்ட விரிவுரையாளர்,
தலைவர், உயிரியல் விஞ்ஞானங்கள் பிரிவு
பிரயோக விஞ்ஞான பிரிவு,
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button