சில ஊடகங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஜனாதிபதிக்கு சஜித்திடம் இருந்து காரசாரமான பதிலடி – நாட்டின் தூணாக இருக்கும் ஊடக சுதந்திரத்தை பறிக்க முற்பட வேண்டாம் எனவும் அரசாங்கத்திடம் சஜித் வேண்டுகோள்
ஊடகங்கள் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துகளுக்காக அவரை கடுமையாக சாடிய சமகி ஜன பலவேகயவின் தலைவர் சஜித் பிரேமதாச, ஊடகங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் இருந்து பின்வாங்குமாறு திஸாநாயக்கவிடம் கேட்டுக் கொண்டார்.
ஊடகங்களுக்கு ஆலோசனை வழங்குவதையும் அடக்குவதையும் நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் நாங்கள் கூற விரும்புகிறோம் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
“ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க இருந்த போது ஊடகங்கள் பற்றி பேசவில்லை, ஊடக சுதந்திரம், உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பற்றி பேசினார். ஆனால் இப்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஊடகங்களுக்கு ஆலோசனை வழங்க முயற்சிக்கிறார்.
“ஊடக சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி நாட்டின் ஊடகங்கள் ஜனாதிபதியிடமோ அல்லது எந்த அரசியல்வாதியிடமிருந்தும் ஆலோசனை பெறத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.ஒரு ஜனநாயக நாட்டின் தூணாக இருக்கும் ஊடக சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
“ஊடக நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும், ஆனால் அது ஊடகங்களால் வரையப்பட்ட ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும். ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஆலோசனை வழங்குவது அல்லது சட்டங்களைக் கொண்டுவருவது ஊடக சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்தானது என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்