கலால் வரி செலுத்தாத மெண்டிஸ் அன்ட் கோ, குருநாகல் ரோயல் சிலோன் டிஸ்டில்லரீஸ், மற்றும் மீகொட மெக்கல்லம் ப்ரூவரி லிமிடெட் ஆகிய மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு லைசன்ஸ் கேன்சல் ஆகிறது

கலால் கட்டளைச் சட்டத்தின்படி, கலால் வரி செலுத்துவதை தொடர்ந்தும் புறக்கணிக்கும் நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகளை இடைநிறுத்தவும், உற்பத்தி உரிமத்தை அடுத்த வருடத்திற்கு நீடிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு 23 மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கலால் வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை செலுத்த நவம்பர் 30ஆம் திகதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்கள் மதுபான உரிமம் தொடர்பான கலால் நிலுவையை செலுத்தியதாக கூறப்படுகிறது.
அதன்படி, வெலிசர டபிள்யூ எம் மெண்டிஸ் அன்ட் கோ லிமிடெட், குருநாகல் ரோயல் சிலோன் டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மீகொட மெக்கல்லம் ப்ரூவரி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வரி செலுத்தாததால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த வழக்கு தீர்ப்புகளுக்கு அமைய, அந்த நிறுவனங்கள் மீது மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
தற்போது செயலிழந்துள்ள லுனுவில க்ளோ பிளெண்டர்ஸ், வயம்ப ஸ்பிரிட் கம்பனி மற்றும் பயாகல கூட்டுறவு டிஸ்டில்லரிஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும், அதன்பின் அவற்றுக்கான வரி நிலுவையை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுதவிர வடமாகாணத்தின் வான்கானைவில் அமைந்துள்ள வலிகாமம் மதுபான தொழிற்சாலை தொடர்பான கலால் வரி நிலுவையை செலுத்தும் வரை மதுபான உற்பத்தியை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

