🕋 இறைதூதர் இப்ராஹீம் (அலை) மில்லதிற்கு ஹஜ் உம்ரா கற்பிக்கும் வாழ்க்கைப் பாடம்!

“இப்ராஹீம் மீதும் அவரது சந்ததிகள் மீதும் ஆசிர்வதித்து அருள் புரிந்தது போல் முஹம்மத் மீதும் அவர்தம் குடும்பத்தின் மீதும் ஆசிர்வதித்து அருள் புரிவாயாக!”
என்ற ஸலாதுல் இப்ராஹிய்யாஹ் பற்றி அதிகமாக நான் யோசிப்பதுண்டு, ஏன் இறுதி இறைதூதர் (ஸல்) அவ்வாறு தன்மீது தொழுகையில் ஸலாத்தும் ஸலாமும் கூறுவதை விரும்பினார்கள்?
இறுதி இறைதூதர் ஸையிதுல் அன்பியாஉ நபிமார்களுக்கெல்லாம் நாளை மறுமையில் தலைவரல்லவா? என்றெல்லாம் அடிமனதில் ஒரு கேள்வி எழுந்து கொண்டிருந்தது.
விடை தேடும் பயணத்தில் அல்குர்ஆனிய வசனங்கள் அதற்கான பல நியாயங்களை சொல்வதனை கண்டு கொண்டேன்..!
இப்ராஹீம் (அலை) அவர்களது பிறப்பு வளர்ப்பு, பிரபஞ்சம், இறைவன், மனிதன், வாழ்வு, மரணம் பற்றிய தேடல்கள் பின்னர் அவர் பறைசாற்றிய ஓரிறைக் கொள்கை, அதன் மீது கொண்டிருந்த ஆழமான அசையாத நம்பிக்கை, அதற்காக அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புகள், அவரது குடும்ப வாழ்வில் அது கொண்டிருந்த தாக்கம் என்பவற்றால் மனிதகுலத்திற்கு தரப்பட்ட முன்மாதிரியான வாழ்வுநெறி என பல விடயங்கள் அல்குர்ஆனில் அழகாக சொல்லித் தரப்படுகிறது.
தன்னை மாத்திரமல்ல தனது சந்ததிகளில் இருந்தும் சத்தியத்தின் தீபத்தை ஏந்தி நிற்கும் யுகபுருஷர்களை இமாம்களை உருவாக்குமாறு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவர் வேண்டிக் கொண்டதற்கிணங்க அவரது சந்ததிகளில் இருந்து நபிமார்களும் ரஸூல்மார்களும் தோன்றுகிறார்கள்..
இப்ராஹீமுடைய மில்லத் வழித்தோன்றல்கள் எனும் கெளரவம் தான் எமது உயிரிலும் மேலான தலைவர் இறுதிநபி வரையிலான அனைவருக்கும் அவரது உம்மத்திற்கும் தரப்பட்டுள்ள அடையாளமாகும்!
இப்ராஹீம் நபியவர்களது வாழ்வை பணிகளை, வாழ்வு முறையை, அர்ப்பணங்களை அடையாளப்படுத்துகின்ற கிரியைகளையே இறுதிக் கடமை ஹஜ் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
புனித மக்காவில் உள்ள கஃபதுல்லாஹ் இறையில்லத்தை புனர்நிர்மாணம் செய்து அதனை வளம் வந்த அவரது பிரார்தனைகள் அங்கீகரிக்கப்பட்டதால் தான் இன்றுவரை உலகின் அத்தனை மூலை முடுக்குகளில் இருந்தும் மக்கள் அணியணியாக அங்கு சென்று இறையில்லத்தை வளம் வந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.
அவர்களது மனைவி ஹாஜராவையும் மகன் இஸ்மாயீலையும் (அலைஹிமஸ்ஸலாம்) விட்டுச் சென்ற அந்த பூமி அனைத்து வளங்களையும் கொண்ட பூமியாக திகழ்கின்றது.
அல்லாஹ்வின் கட்டளைப்படி அவர்விடுத்த அந்த அழைப்பிற்கு பதில் கூறியவர்களாகவே நாம் லெப்பைக் அல்லாஹும்ம லெப்பைக்… அல்லாஹ்வை இதோ நாங்கள் உனது கட்டளைக்கு அடிபணிந்து உன்னிடம் ஆஜராகிவிட்டோம் என ஹஜ் உம்ராவிற்காக அந்த புனித பூமியை நோக்கிச் செல்கின்றோம்..
ஸஃபா, மர்வா, அரபா மினா முஸ்தலிபா என அவர்கள் தரிசித்த இடங்களில் அவர்கள் புரிந்த அர்ப்பணங்கள் ஷைத்தானுடனான போராட்டங்கள் என அத்தனை சம்பவங்களையும் சரித்திரங்கள் ஆக்கிக் கொண்டிருக்கின்றோம்..
இத்தகைய அருளும் ஆசிர்வாதமும் பரக்கத்தும் ஸலவாத்தும் ஸலாமும் வேறு எந்த நபிமாருக்கும் ரஸூல்மாருக்கும் தரப்படவில்லை அல்லவா..
அதனால் தான் அத்தகைய அருளையும் ஆசிர்வாதத்தையும் எமது தலைவர் மில்லத் இப்றாஹீமை பரிபூரணப்படுத்திய இறைதூதர் முஹம்மத் ஸல் அவர்களுக்காகவும் நாம் இறைஞ்சுகிறோம்!
அந்த நல்லடியார்கள் மீது சொரியப்பட்ட அன்பையும் அருளையும் ஆசிர்வாதங்களையும் நாமும் அடைந்து கொள்ள தரப்பட்ட கிரியைகள் தான் ஹஜ்ஜும் உம்ராவும் துல்ஹஜ்மாத முதற்பத்து நாட்களும், அரபா தின நோன்பும் உழ்ஹிய்யா எனும் அர்ப்பணமும், நல்லமல்கள் நற்கிரியைகளின் சமர்ப்பணங்களுமாகும்!
பிரபஞ்சம், பிரபஞ்ச கர்த்தா, உலகம், மனிதன், வாழ்வு, மரணம், இம்மை, மறுமை என அனைத்து வாழ்க்கைத் தத்துவங்களையும் அவைபற்றிய அறிவையும் தெளிவையும் பறைசாற்றும் அல்லாஹ்வின் தூதர் இப்றாஹீம அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீதும் அவர்தம் சந்ததிகள் மீதும் ஸலாத்தும் ஸலாமும் பரக்கத்தும் சொரிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்திலும் பெரியவன், அனைத்துப் புகழும் அவனுக்கே உரியன!
அல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து!
இந்தப் புனித தினங்களில் உங்கள் ஆத்மார்த்தமான துஆக்களில் யுகத்தின் மிகக் கொடிய சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பலஸ்தீன் காஸா உறவுகள், எமது அன்பின் பெற்றோர்கள் (ரஹ்) உடன்பிறப்புக்கள், மனைவி மக்கள், உற்றார் உறவினர், ஆசான்கள், அறப்பணி புரியும் நல்லோர்கள் அனைவரையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள், எம்மனைவரது பிரார்தனைகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கீகரித்துக் கொள்வானாக!
💝
*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 07.07.2022 || மீள்பதிவு || SHARE & Get rewarded


