“போதையற்ற ஏறாவூர்” எனும் தொனிப்பொருளில் போதைப்பொருட்களுக்கு எதிரான வீடு வீடான விழிப்புணர்வு பிரச்சாரம்

ஏறாவூர் தேசிய மக்கள் சக்தி (NPP) இளைஞர் அணியின் ஏற்பாட்டில், “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசியளவிலான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஊரை அமைதியிழக்கச் செய்யும் போதைப்பழக்கத்தை முற்றிலும் அகற்ற, ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை எட்டச் செய்யும் வீடு வீடான பிரச்சாரம் இன்று (22.11.2025) ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி இளைஞர் அணியினர், ஏறாவூர் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், Lions Club – Eravur, ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரிகள், பிரதேச இளைஞர் சேவைகள் மன்றம், மிச்நகர் RDS அமைப்பினர், பொதுமக்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டு இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை வீடு வீடாக முன்னெடுத்தனர்.
இதன் போது பொதுமக்களுக்கு போதைப் பொருட்களின் அபாயம், தீங்குகளை பற்றி தெளிவுபடுத்தப்பட்டதோடு போதை விற்பனயாளர்களை பற்றிய தகவல்களை இரகசியமாக வழங்கத்தக்க 1818 என்ற இலக்கம் அறிமுகப்படுத்தல், போதைக்கு அடிமையாகியவர்களை மீட்டெடுடுக்கும் புணர்வாழ்வு மையங்கள் பற்றிய தெளிவை வழங்கல் போன்ற செயற்பாடுகளும் இடம்பெற்றது.
பிரச்சாரத்தில் ஏறாவூர் பகுதியின் பொதுமக்கள் பெருமளவில் இணைந்து, போதையற்ற சமூகத்தை உருவாக்கும் முயற்சிக்கு தங்களின் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தினர். வீடு வீடாக சென்ற குழுவினரை வரவேற்று தேவையான தகவல்களை பகிர்ந்து கொண்டதோடு, போதைப்பொருளை முற்றிலும் அகற்றும் சமூகப் பொறுப்பில் தாங்களும் பங்கெடுக்கத் தயாராக இருப்பதையும் பலர் வலியுறுத்தினர்.













