News

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் 100 இலட்சம் விலங்குகள் அழிந்துள்ளன – 30 இலட்சம் முட்டையிடும் கோழிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன – உயிரிழந்த  மனிதர்களின் எண்ணிக்கையை அரசாங்கத்திடம் தான் கேட்க வேண்டும் ; வஜிர

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் , முன்னாள் அமைச்சர் வஜிர அபேயவர்தன அவர்கள் நேற்று (10) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் அதற்கு அவர் அளித்த பதில்கள்:

கேள்வி – “திட்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் அல்லது சொத்துக்களின் அளவை இன்னும் கணக்கிட்டு முடிக்கவில்லை என்று அரசாங்கம் கூறுகிறது. இவ்வளவு நேரம் எடுக்கிறதா இதையெல்லாம் கணக்கிட? இதுபற்றி உங்களின் கருத்து என்ன?

பதில் – குறிப்பாக இந்த நேரத்தில் இலங்கையில் உள்ள விலங்கின தொகையைப் பார்த்தால், சுமார் 30 இலட்சம் முட்டையிடும் கோழிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அண்ணளவாக 100 இலட்சம் அனைத்து விலங்குகளும் அழிந்துள்ளன. அதேபோல், மனித இனத்திலும் ஒரு பெரிய எண்ணிக்கையிலானோர் உயிரிழந்துள்ளனர்.

நம் நாட்டில் 14,022 கிராம அலுவலர்கள் உள்ளனர். சுமார் 17,000 அபிவிருத்தி அலுவலர்கள், விவசாய ஆராய்ச்சி அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் உள்ளனர். இது ஒரு பெரிய செயல்முறை (எந்திரம்). இந்த செயல்முறையால் சரியாகச் சொன்னால், 72 மணி நேரத்தில், அதாவது 3 நாட்களுக்குள் இறந்தவர்களின் எண்ணிக்கையைச் சொல்ல முடியும்.

இதற்கு சிறந்த உதாரணம் என்னவென்றால், 2004 டிசம்பர் 26 அன்று இலங்கைக்கு சுனாமி வந்தது. 28, 29 ஆம் தேதிக்குள் சுமார் 42,000 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

எனவே, நாட்டில் ஒரு மிகவும் வலுவான அரச செயல்முறை உள்ளது. அதை வலுவாகப் பயன்படுத்தினால், சில மணி நேரங்களில் சரியான தகவலை முழு இலங்கைக்கும், இந்த நிலையை எதிர்கொண்ட குடும்பங்களுக்கும் அறிவிக்க முடியும்.

கேள்வி – இறந்தவர்களின் எண்ணிக்கையை இந்த அரசாங்கம் ஏன் இன்னும் வெளியிடவில்லை?

பதில் – அதற்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. அதை அரசாங்கத்திடம் தான் கேட்க வேண்டும்.

குறிப்பாக, இந்த அரச செயல்முறையைப் பயன்படுத்த வேண்டும். அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் இறந்துள்ளன. அந்த விலங்குகளின் உடல்களை முறையாகப் புதைக்காவிட்டால், பாரிய தொற்றுநோய்களைச் சந்திக்க நேரிடும். இதனால் மனித இனமும் அபாயகரமான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். எனவே, சுகாதார அமைப்பு இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது. ஆகையால், அரச செயல்முறையும், அரசியல் அதிகாரமும் ஒன்றுபட்டு ஒரு குழுவாகச் செயல்பட்டால் மட்டுமே வாழும் பொதுமக்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்கும்.

கேள்வி – அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையா?

பதில் – தெரியவில்லை. அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன், இது போன்ற ஒரு சூழ்நிலைக்கு எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். அவர்கள் கூறியபடி முன் தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டதா என்று சரிபார்ப்பது முக்கியம்.

கேள்வி – எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில் – எனது நினைவின்படி, 2023 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், இந்த சூழ்நிலைகளை எதிர்கொள்ள 200 பக்கங்கள் கொண்ட அனர்த்த முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதை வெளியிட்டால், இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் அதில் தீர்வுகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். 2023 முதல் 2030 வரை இலங்கை அனர்த்தங்களில் இருந்து எப்படி மீள்வது, பொதுமக்களை எப்படிப் பாதுகாப்பது என்பது போன்ற 200 பக்கங்கள் உள்ளன. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டமாகும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button