“நாட்டின் நம்பிக்கையை சோதிக்கும் 600,000 டொலர் மர்மம்”

இலங்கை அஞ்சல் திணைக்களம் மூலம் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 600,000 அமெரிக்க டொலர் பணம் காணாமல் போனதாக வெளியான தகவல், ஒரு சாதாரண நிர்வாகக் குறைபாடு என ஒதுக்க முடியாத அளவிற்கு பல கேள்விகளை எழுப்புகிறது.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த விதமே அதிர்ச்சியளிக்கிறது. உள்நாட்டு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் மூலம் அல்லாமல், வெளிநாட்டு தரப்பின் முறைப்பாட்டின் மூலம் மட்டுமே இது வெளிப்பட்டிருப்பது, நாட்டின் நிர்வாக அமைப்பின் மீது கடுமையான சந்தேகத்தை உருவாக்குகிறது
ஒரு ஹேக்கிங் அல்லது ஒரு நிர்வாக தவறு என்ற வரம்பை தாண்டி,அரசாங்கத்தின் செயல்திறன் மற்றும் நிதி மேலாண்மை குறித்து மக்களிடையே மட்டுமல்ல, சர்வதேச தரப்புகளிடையிலும் பெரும் சந்தேகத்தை உருவாக்கும் அபாயம் உள்ளது.
சர்வதேச சேவைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் நம்பிக்கையின் மீதுதான் நிலைநிற்கின்றன. அந்த நம்பிக்கையில் சிறிய சிதைவு ஏற்பட்டால், அதன் விளைவுகள் பெரிதாகும். குறிப்பாக ஒரு அரசாங்க நிறுவனத்தின் மூலம் பணம் பரிமாறப்பட்டு அது கண்காணிக்கப்படாமல் போனால், அது தனிப்பட்ட தவறாக அல்ல அமைப்பின் பலவீனமாகவே பார்க்கப்படும்.
இந்த சம்பவம், “எங்கே தவறு நடந்தது?” என்ற கேள்வியை மட்டுமல்ல, “இது மீண்டும் நடக்காமல் தடுக்க என்ன உத்தரவாதம்?” என்ற இன்னும் முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது.
விசாரணைகள் நடைபெறுகின்றன என்பது ஆரம்பம் மட்டுமே.
மக்களும் சர்வதேச தரப்புகளும் எதிர்பார்ப்பது,
வெளிப்படையான விளக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் உறுதியான திருத்த நடவடிக்கை இவை இல்லையெனில், இந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட இழப்பாக இல்லாமல்,இலங்கையின் நம்பகத்தன்மையை சோதிக்கும் ஒரு முக்கிய தருணமாக மாறும்.
ஒரு நாட்டின் நிதி மேலாண்மை என்பது கணக்குகளின் விடயம் மட்டுமல்ல அது நம்பிக்கையின் மேலாண்மை. அந்த நம்பிக்கையை காக்க வேண்டிய நேரம் இதுவே.
மக்கள் கேள்வி கேட்கிறார்கள், “நாம் செலுத்தும் வரிப் பணம் கூட பாதுகாப்பாக இல்லையெனில், இந்த அமைப்பின் மீது எப்படிப் நம்பிக்கை வைக்கலாம்?”
இது உள்ளூர் பிரச்சினை மட்டுமல்ல. இது சர்வதேச அளவில் ஒரு ஆபத்தான சிக்னல்.
ஒரு அரசு நிறுவனத்தின் மூலம் அனுப்பப்பட்ட பணமே இலக்கை அடையவில்லை என்றால்,
இலங்கையுடன் செய்யப்படும் எந்த வர்த்தகமும் பாதுகாப்பானதா? என்ற கேள்வி உலகளவில் எழுவது தவிர்க்க முடியாது.
[MLM.சுஹைல்]



