News

“எரிசக்தி மானியங்கள் நீக்கம்.. கடன் தவணையைக் கோரி ஜனாதிபதி அநுர அனுப்பிய கடிதத்தை வெளியிட்டது IMF…”

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அர்ப்பணிப்பை இலங்கை அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியது

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) பெற்றுக்கொள்ளப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான பொருளாதார சீர்திருத்தத் திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பை இலங்கை அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இணைந்து, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள இக்கடிதத்தின் மூலம், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான சில முக்கிய தீர்மானங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செலவினங்களை ஈடுசெய்தல் மற்றும் மானியங்களை நீக்குதல்

குறிப்பாக, உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகளைத் தீர்மானிக்கும் வழிமுறைகள் (Cost-reflective pricing) தற்போது சரியான பாதையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், சமீபத்திய பிராந்திய மற்றும் காலநிலை தாக்கங்கள் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள், மின்சாரம், உரம் மற்றும் மீனவர்களுக்கான மானியங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த எரிசக்தி மற்றும் ஏனைய நிவாரண நடவடிக்கைகளுக்கான செலவு 100 பில்லியன் ரூபா என்ற அதிகபட்ச எல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய தீர்மானம்: இந்த அனைத்து நிவாரண நடவடிக்கைகளும் வரவுசெலவுத் திட்டத்தின் (Budget) மூலமே ஈடுசெய்யப்படும் எனத் தெரிவித்துள்ள அரசாங்கம், நாடு பாரிய சிரமத்திற்கு மத்தியில் அடைந்துள்ள நிதி ஸ்திரத்தன்மை மற்றும் கொள்கை ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்காக, இந்த மானிய முறைகளை எதிர்வரும் 2026 செப்டம்பர் மாத இறுதிக்குள் படிப்படியாக நீக்க எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளது.

செயல்திறன் அளவுகோல்கள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள்

2025 டிசம்பர் இறுதிக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த அனைத்து அளவுசார் செயல்திறன் அளவுகோல்களையும் (QPC) மற்றும் இலக்குக் குறிகாட்டிகளையும் (IT) அடைவதில் இலங்கை வெற்றியடைந்துள்ளது.

எனினும், சைபர் குற்றமொன்று (Cybercrime) காரணமாக சில வெளிநாட்டுக் கடன் செலுத்தல்கள் தாமதமடைந்ததால், வெளிநாட்டுக் கடன் நிலுவைகளை ஏற்படுத்தாதிருப்பதற்கான தொடர்ச்சியான செயல்திறன் அளவுகோல் மட்டும் சிறியளவில் மீறப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும், பிப்ரவரி மாத இறுதிக்குள் 22 கட்டமைப்பு மைல்கற்களில் (Structural Benchmarks) 16 பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த சைபர் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக, எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வலுப்படுத்தவும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் புதிய கடன் மேலாண்மை தகவல் அமைப்பொன்றை (Debt Management Information System) நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அடுத்த கடன் தவணைக்கான கோரிக்கை

இலங்கையின் சாதகமான செயல்திறனைக் கருத்திற்கொண்டு, EFF திட்டத்தின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை வெற்றிகரமாக முடித்து, 508 மில்லியன் எஸ்டிஆர் (SDR) – அதாவது தோராயமாக 670 மில்லியன் அமெரிக்க டாலர் – கடன் தவணையை விடுவிப்பதற்கு அனுமதி வழங்குமாறு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையிடம் கோரிக்கை விடுத்து இக்கடிதத்தை அனுப்பியுள்ளது.

அத்துடன், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட வெளிநாட்டுக் கடன் தாமதம் தொடர்பாக தள்ளுபடி சான்றிதழ் (Waiver) ஒன்றையும், 2026 டிசம்பர் மற்றும் 2027 பிப்ரவரி வரையிலான புதிய கட்டமைப்பு மைல்கற்கள் மற்றும் இலக்குகளுக்கான அனுமதியையும் வழங்குமாறு இலங்கை அரசாங்கம் மேலும் கோரியுள்ளது.

Recent Articles

Back to top button