“ஐஎம்எப் (IMF) கூறுவது உண்மை.. மின்சாரக் கட்டணம் உற்பத்திச் செலவின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்” – ஜனாதிபதி
மின்சார சபையின் இருப்புக்காக, மின்சார அலகு ஒன்றின் விற்பனை விலை அதன் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) எட்டப்பட்ட அந்தப் கொள்கையைத் தானும் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்பூக்கனையிலிருந்து கலகெதர வரையான மூன்றாவது கட்டத்தின் கட்டுமானப் பணிகளை இன்று (29) மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, மின்சார அலகு ஒன்றின் உற்பத்திச் செலவைக் குறைப்பதே அரசாங்கத்தின் முதன்மைத் திட்டம் எனக் கூறினார்.
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக, இதற்கு முன்னர் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த ரம்பூக்கனையிலிருந்து கலகெதர வரையான பகுதி, 112.4 பில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் குறித்துக் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் பொருளாதாரக் பார்வை குறித்து விளக்கிய அவர், எந்தவொரு வெளிப்புற அதிர்ச்சிக்கும் அல்லது நெருக்கடிக்கும் அஞ்சாமல் முகம்கொடுக்கக்கூடிய வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனக் கூறினார்.
இலங்கை வரலாற்றில் மிகக் குறைந்த வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையைப் பதிவு செய்ய தற்போதைய அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும், மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் தேசிய வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு உயர்த்த முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


