News

பாக்கிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழு (HEC), இலங்கை மாணவர்களுக்காக அல்லாமா முஹம்மது இக்பால் கல்வித்தொகை திட்டத்தை ஆரம்பித்தது

பாக்கிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழு (HEC), இலங்கை மாணவர்களுக்காக அல்லாமா முஹம்மது இக்பால் கல்வித்தொகை திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இத்திட்டம் பாக்கிஸ்தானின் உயர்தர பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி பட்டப்படிப்புகளை மேற்கொள்வதற்காக முழுமையான மற்றும் பகுதியளவிலான நிதியுதவி வாய்ப்புகளை வழங்குகிறது.


இந்த முன்முயற்சியானது இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் இடையிலான கல்விசார் உறவுகளையும் கலாச்சார பரிமாற்றத்தையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பாக்கிஸ்தான் சமூகம் மற்றும் விழுமியங்கள் பற்றிய அனுபவத்தைப் பெறுவதுடன், தங்களது சொந்த கலாச்சாரத்தை அங்கிருக்கும் சக மாணவர்கள் மற்றும் சமூகக் குழுக்களுடன் பகிர்ந்து கொள்வர்.


பொறியியல், இயற்கை அறிவியல், சமூக அறிவியல், கலை, மனிதநேயம், கட்டிடக்கலை, நுண்கலைகள், வணிகம், தகவல் தொழில்நுட்பம் (IT), விவசாயம் மற்றும் ஊடக ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இக்கல்வித்தொகைகள் கிடைக்கின்றன.


முழுமையான நிதியுதவி பெறும் கல்வித்தொகைகள் கல்விக்கட்டணம், வாழ்க்கைச் செலவுக்கான கொடுப்பனவுகள், விடுதி கட்டணங்கள் மற்றும் புத்தகச் செலவுகளை உள்ளடக்குகின்றன. பகுதியளவிலான கல்வித்தொகைகள் கல்விக்கட்டணத்தை மாத்திரம் உள்ளடக்குகின்றன.


இதற்கான தகைமைகளுக்கு சிறந்த கல்விப்பின்னணி அவசியமாகும்: மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு குறைந்தபட்சம் 65% புள்ளிகளும், முதுகலை மற்றும் கலாநிதி படிப்புகளுக்கு 60% புள்ளிகளும் பெற்றிருக்க வேண்டும். வயது எல்லைகளாக இளங்கலைக்கு 23 வயதும், முதுகலைக்கு 35 வயதும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு 40 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


விண்ணப்பதாரர்கள் 2026 ஜூன் 25 ஆம் திகதிக்கு முன்னர் HEC இன் இணையத்தளத்தின் ஊடாக ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கொழும்பிலுள்ள பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து HEC நடத்தும் தகுதித்தேர்வுக்கு அனைத்து விண்ணப்பதாரர்களும் தோற்ற வேண்டும்.
பாக்கிஸ்தானில் தங்களது படிப்பை முடித்த பின்னர், பட்டதாரிகள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதற்காக மீண்டும் இலங்கைக்கு திரும்புவதை இத்திட்டம் கட்டாயமாக்குகிறது.
விசாரணைகளுக்கு, திட்டப் பணிப்பாளர் ஜெஹான்சிப் கானை info.paksl@hec.gov.pk என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button