News

சுரேஷ் சலே விவகாரத்தைப் பயன்படுத்தி, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற இனவாத சக்திகள் சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி, நாட்டில் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது ; ரிசாத் பதியுதீன்

சுரேஷ் சலே விவகாரத்தைப் பயன்படுத்தி, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற இனவாத சக்திகள் சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி, நாட்டில் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற ‘வலுசக்தி மற்றும் வாழ்க்கைச் செலவுப் பாதுகாப்புத் திட்டம்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

“உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இன்றுவரை நீங்காத வலியாகவே உள்ளது. பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்கள் நீதி கோரிப் போராடுகிறார்கள். இந்தத் தாக்குதல்களால் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த முஸ்லிம் மக்களும், உண்மை வெளிவர வேண்டும்; உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; ஒட்டுமொத்த முஸ்லிம் இனத்தின் மீது சுமத்தப்பட்ட கறை நீங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டு புதிய தகவல்கள் வெளிவரும் நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சுரேஷ் சலேக்காகச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது. அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியான சுரேஷ் சலே, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் ஊடாகவே நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, விசாரணை அதிகாரியை மாற்றக் கோருவதும், சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் எனக் கூறுவதும் சிறுபிள்ளைத்தனமான செயலாகும். இது விசாரணைகளைத் திசைதிருப்பும் முயற்சியாகும்.

இதே போராட்டக் களத்தில் கலந்துகொண்ட தேரர் ஒருவர், ‘சுரேஷ் சலே ஒரு முஸ்லிமாக இருந்தாலும் அவருக்காக நாங்கள் குரல் கொடுப்போம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஜமாத்தே இஸ்லாம் அமைப்பின் தலைவர், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அசாத் சாலி, அஹ்னாப் ஜசீம் போன்ற முஸ்லிம்கள் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் இருந்தபோது, இந்தத் தேரர்களோ அல்லது இனவாத சக்திகளோ அவர்களுக்காக ஒருபோதும் குரல் கொடுக்கவில்லை.

நானும் எனது சகோதரரும் கூட இவ்வாறே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம். எமக்காகப் பல நல்லுள்ளங்கள் குரல் கொடுத்தன. ஆனால், நாங்கள் அந்த நேரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவோ அல்லது இனவாத சக்திகளை ஒன்றிணைக்கவோ முயற்சிக்கவில்லை. ஆனால் இன்று, குண்டுத்தாக்குதலின் உண்மை வெளிவராமல் தடுப்பதற்காக அனைத்து இனவாத சக்திகளும் ஒன்றிணைந்துள்ளன.

ஆகவே, குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும். இத்தகைய இனவாதிகளின் சில்லறைத்தனமான அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியக் கூடாது” என்று தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button