“தேவைப்பட்டால் எங்கேயும் பலவந்தமாக நுழைந்து அரசாங்கத்தைப் பாதுகாப்போம்..- ரஞ்சன் ஜயலால்”
மாற்றத்தை மாற்றியமைக்க அல்லது அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட யாராவது முயற்சித்தால், அத்தகைய எந்தவொரு இடத்திற்கும் அனுமதியின்றி நுழைந்தாவது தற்போதைய ஆட்சியைப் பாதுகாக்கத் தான் தயாராக இருப்பதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் (Sri Lanka Foundation Institute) நடைபெற்ற இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் வருடாந்த மகா மாநாட்டில் உரையாற்றிய அச்சங்கத்தின் முன்னாள் செயலாளரும், தற்போதைய கடுவெல மேயருமான ரஞ்சன் ஜயலால் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
அமைச்சர் கே.டி. லால்காந்த உள்ளிட்ட குழுவினரின் பங்கேற்புடன் இந்த மாநாடு நடைபெற்றது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரஞ்சன் ஜயலால் மேலும் குறிப்பிட்டதாவது:
“எங்களது போராட்டம் இன்னும் முடியவில்லை. இலங்கை மின்சார சபையை விற்று, தனிப்பட்ட லாபத்திற்காக செயற்பட்ட குழுவினர் இந்த மாற்றத்திற்கு எதிராக இருந்தனர். நாங்கள் ஓய்வு பெற்றிருந்தாலும், இந்தத் துறையில் இன்னும் ஒரு பெரிய சவாலாகவே விளங்குகிறோம். நாடாளுமன்றத்தில் அது தொடர்பான சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்ட போது கூட எங்களது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நாட்டிற்கும் நாம் பெற்ற வெற்றிக்கும் தீங்கு விளைவிக்க ஒரு குழுவினர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் சிறிது நேரம் உறங்கும் போது அவர்கள் அதைச் செய்யக்கூடும். ஆனால் நாம் எப்போதும் விழிப்புடனேயே இருக்கிறோம். எங்களது இந்த விழிப்புணர்வு குறித்து எதிரிகள் அச்சம் கொள்ள வேண்டும். ஏனெனில் எங்களுடன் இருந்துகொண்டே எங்களைக் காலை வாரும் நபர்கள் பற்றியும் எங்களுக்குப் புரிதல் இருக்கிறது.
தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு இடத்திற்கும் அனுமதியின்றி நுழைந்தாவது இந்த அரசாங்கத்தையும் நாம் பெற்ற வெற்றியையும் பாதுகாக்க நாங்கள் தயங்க மாட்டோம். அதற்கு எங்களுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. நாம் தீட்சை பெற்ற (அமைதியாக இருக்கும்) பாம்புகள் அல்ல. எந்தவொரு கணத்திலும் உருமாறி, இந்த செயல்முறையை சீர்குலைக்க இடமளிக்காமல் பாதுகாப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.”

