பொருளாதாரம் மீண்டும் நெருக்கடிக்குள்.. IMF இடமிருந்தும் சிவப்பு எச்சரிக்கை..
இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்கிறது: நிபுணர்கள் எச்சரிக்கை
இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், அதற்கான பல அறிகுறிகள் தற்போதைய பொருளாதாரச் செயற்பாடுகளில் ஏற்கனவே தென்படுவதாகவும் நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அடுத்த வருடத்தில் (2027) இலங்கை பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்குள்ளாகும் என்றும், நாடு ஏற்கனவே கடுமையான வெளிநாட்டு நாணய மாற்று அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்ததுடன், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கமும் மத்திய வங்கியும் நாணயக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், உள்நாட்டு வெளிநாட்டு நாணய மாற்று சந்தையில் டாலர்களை விற்பனை செய்வதன் மூலம் ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி முயற்சித்த போதிலும், அதுவொரு நிலையான தீர்வாகாது என்றும் அந்த நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
2022 ஆம் ஆண்டில் நாடு வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போதிலும், அதிலிருந்து முறையான பாடங்களைக் கற்றுக்கொண்டு, நிலையான முறையில் வெளிநாட்டு நாணய வருவாய் வழிகளை அதிகரிப்பதற்கான உத்திகளில் கவனம் செலுத்தவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டமொன்றை நிறைவு செய்துகொண்டிருக்கும் நிலையிலும், நாடு மீண்டும் ஒருமுறை வெளிநாட்டு நாணய அழுத்தத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் நிலைத்தன்மை (வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன்) அடிப்படையில் நாடு அதிக ஆபத்தில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியமே தனது சமீபத்திய மறுஆய்வு அறிக்கையின் மூலம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
2027 மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டம் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில், பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு நாணய நிர்வாகத்திற்கு இலங்கை தயாராக வேண்டும் என்றும், அது மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
ஷியாம் நுவான் கணேவத்த
த்வைன (Dvaina)



