News

அந்நியச் செலாவணிப் பிரச்சினை… இலங்கை புதிய IMF திட்டத்திற்குள் நுழைகிறதா…?

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய திட்டமொன்றில் இணையக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நாட்டிற்குள் வரும் அமெரிக்க டொலர் வருமானத்தை விட, டொலர் செலவினம் அதிகரித்தமையே இந்த நிதி நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதுடன், தற்போது நடைமுறையிலுள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளனர்.

2023ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்தக் கடனில், பல மில்லியன் டொலர் பெறுமதியான சில தவணைப் பணம் ஏற்கனவே நாட்டிற்கு கிடைத்துள்ளது. இதற்கு மேலதிகமாக, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தும் (ADB) நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் விண்ணப்பித்துள்ளது.

இருப்பினும், இந்த நிதி நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளும் போது உடன்பட்ட கடுமையான நிபந்தனைகளின்படி, உள்நாட்டு வருமான வழிகளை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்தின் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

உலகளாவிய ரீதியில் நிலவும் மத்திய கிழக்கு பிராந்தியப் போர்ச் சூழலும் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமை காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதுடன், இதனால் இறக்குமதிச் செலவுகளும் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன.

அதேபோல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மூலம் கிடைக்கும் பணப் பிரேஷணங்கள் (Re-mittances) மற்றும் ஏற்றுமதி வருமானம் என்பனவும் வரையறுக்கப்பட்ட மட்டத்திலேயே காணப்படுவதால், வெளிநாட்டு நாணயக் கையிருப்பை நிர்வகிப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. இவை அனைத்திற்கும் மத்தியில், எதிர்காலத்தில் வெளிநாட்டுக் கடன் தவணைகளை இலங்கை மீண்டும் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் ஆய்வாளர்கள் மேலும் எச்சரிக்கின்றனர்.

Recent Articles

Back to top button