News

அடுத்த 60 நாட்களுக்குள் எட்டப்பட வேண்டிய விரிவான, இறுதி ஒப்பந்தத்திற்கான 14 அம்ச கோரிக்கைகளை ஈரானும் அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டன – முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி

சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் நகரில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 

டொனால்ட் ட்ரம்பின் அதிரடி எச்சரிக்கை, ஈரானின் வெளிநடப்பு எனப் பல பரபரப்புகளுக்கு மத்தியில், இந்த முதற்கட்ட அமர்வில் சில முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.



கடந்த 18ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான நோக்கில் இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



அமெரிக்கா தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் தரப்பில் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி மற்றும் சபாநாயகர் முகமது பாக்கெர் கலிபாஃப் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவும் இதில் பங்கேற்றன.



பேச்சுவார்த்தை தொடங்குவதற்குச் சற்று முன்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பை ஈரான் கட்டுப்படுத்தத் தவறினால், அந்நாட்டின் மீது புதிய இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்திருந்தார். 

இந்த எச்சரிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஈரான் தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தையிலிருந்து திடீரென வெளிநடப்பு செய்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. 

எனினும், மத்தியஸ்த நாடுகளின் தலையீட்டால் நிலைமை சீரமைக்கப்பட்டு, பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்ந்தது.





இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பாகிஸ்தானும் கட்டாரும் மத்தியஸ்த நாடுகளாகச் செயல்பட்டு வருகின்றன. பேச்சுவார்த்தையின் நிறைவில் இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:



அடுத்த 60 நாட்களுக்குள் எட்டப்பட வேண்டிய விரிவான, இறுதி ஒப்பந்தத்திற்கான 14 அம்ச வழிகாட்டி வரைபடத்தை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.



சர்வதேச எரிபொருள் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரினை வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதிசெய்ய, பிரத்யேக கூட்டுத் தகவல் தொடர்பு வழிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.



லெபனானில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதைக் கண்காணித்து உறுதி செய்வதற்காக, புதிய ‘மோதல் தவிர்ப்புப் பிரிவு’ ஒன்றை அமைக்க இரு தரப்பும் உடன்பட்டுள்ளன.



சர்வதேச அளவில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில், இறுதி ஒப்பந்தத்தை எட்டும் வரை இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான சூழலில் நடைபெறுவதை உறுதி செய்யத் தங்களது முழு முயற்சியையும் வழங்கவுள்ளதாக மத்தியஸ்த நாடுகளான பாகிஸ்தானும் கட்டாரும் தெரிவித்துள்ளன

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button