குற்றங்களை செய்த எவரும் தப்ப முடியாது – பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் – ஊடகங்களை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம்.. ஊடகங்கள் எங்கள் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் ; ஜனாதிபதி விசேட உரை

குற்றங்களை செய்த எவரும் தப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விசேட உரையொன்றை ஆற்றிய அவர் வெள்ளை வேன் கடத்தல் , படுகொலைகளை இந்த நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை என்றும் கூறினார்.அவர் மேலும்
குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்கும்போது அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.ஆனால் அந்த விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் இன்று எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் இலக்குகளாக உள்ளனர். யார் என்ன சொன்னாலும் சட்டத்தை அமுல்படுத்தி நீதியை நிலைநாட்டும் எமது பயணம் இடைநடுவில் நிற்காது.
அரசியல் ஆதரவுடன் நிலைகொண்டுள்ள பாதாள உலகமும் , போதைப்பொருள் வியாபாரமும் முற்றாக ஒழிக்கப்படும் .
நாட்டில் நடைபெற்ற கொடூரமான கொலைகள் மற்றும் அட்டூழியங்களுக்குப் பொறுப்பானவர்களை விசாரிக்கும் அனைத்து அதிகாரிகளையும் பாதுகாக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது .ஊழல்வாதிகள் நீதித்துறையூடாக தண்டிக்கப்படுவர்.
வெளிநாடுகளில் உள்ள சாட்சிகளிடமிருந்து ஆதாரங்களைப் பெறுவதை எளிதாக்கும் வகையில் சட்டத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன . சில மாதங்களுக்குள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும்.
நீதித்துறையில் நாங்கள் தலையீடு செய்யமாட்டோம். ஊடகங்களையும் நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம் .அவர்கள் எங்கள் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும்.அதேபோல அவர்கள் தார்மீகமாக நடந்துகொள்ள வேண்டும். – என்றார் ஜனாதிபதி



