News

நீடிக்கப்பட்ட நிதி வசதி வேலைத்திட்டத்தில் அரசாங்கம் காட்டியுள்ள அர்ப்பணிப்பை IMF பாராட்டியது – மக்கள் மீது தேவையற்ற சுமைகளை ஏற்றாமல் விரைவில் இத்திட்டத்தை  வெற்றிகரமாக நிறைவு செய்ய போவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

பலதரப்பட்ட வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும், மெக்ரோ-பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி வேலைத்திட்டத்தின் கீழ் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் காட்டியுள்ள அர்ப்பணிப்பை சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழு பாராட்டியுள்ளது.



ஜூன் 24 முதல் 30ஆம் திகதி வரை கொழும்பிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவினர்,  (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.



இதன்போது கருத்துத் தெரிவித்த அக்குழுவினர், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறும் ஏனைய பல நாடுகளை விடவும் இலங்கை மிக உயர்ந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.



அத்துடன், இலங்கையின் எதிர்காலப் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் தங்களது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.



சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சோனாலி ஜெயின்-சந்திரா (Sonali Jain-Chandra) தலைமையிலான இப்பிரதிநிதிகள் குழு, இலங்கை அடைந்துள்ள பொருளாதார மீட்சிப் பிரகதியையும் நாட்டின் மீண்டெழும் திறனையும் பெரிதும் பாராட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், வரவிருக்கும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள EFF வேலைத்திட்டத்தின் 7ஆவது மதிப்பாய்வின் போது, இலங்கையின் செயல்பாடுகள் அதிகாரப்பூர்வமாக மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதியிடம் தெரிவித்த அக்குழுவினர், அதற்கு முன்னர் இலங்கை பூர்த்தி செய்ய வேண்டிய ஏனைய பொறுப்புகளை நிறைவு செய்யும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.



இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பது ஒருபுறமிருக்க, அதன் பலன்களை மக்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்ப்பதே அரசாங்கத்தின் இறுதி நோக்கம் என்று வலியுறுத்தினார்.



அமெரிக்காவின் வரி விதிப்புகள், ‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் போன்ற வெளிப்புற சவால்களால் சில தடங்கல்கள் ஏற்பட்ட போதிலும், மெக்ரோ-பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுத்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.



EFF வேலைத்திட்டத்தின் கீழ் இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே எஞ்சியுள்ளதால், மக்கள் மீது தேவையற்ற சுமைகளை ஏற்றாமல் அதனை வெற்றிகரமாக நிறைவு செய்ய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button