எதிர்ப்புகள் இருந்தபோதும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வைத்துள்ள அரசாங்கம் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தை மிக விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பு

அரசியலமைப்பின் 107ஆவது உறுப்புரையை மாற்றும் வகையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்ததை முன்வைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்களினூடாக அறிய முடிகிறது.
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை திருத்துவதே இந்த புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் நோக்கம் என்பதுடன், அதற்கமைய தற்போது நடைமுறையிலுள்ள உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கான ஓய்வுபெறும் வயதெல்லையை 65 வயதிலிருந்து 67 வயது வரை நீடிப்பதும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரின் வயதெல்லையை 63 வயதிலிருந்து 65 வயதுவரை நீடிப்பதும் இந்த புதிய அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
1978ஆம் ஆண்டு தற்போதைய அரசியலமைப்பு தற்போது வரையில் 21 சந்தர்ப்பங்களில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் 16 சந்தர்ப்பங்கள் அரச தலைவர்களின் தனிப்பட்ட அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சட்டத்தரணி கே.டபிள்யூ. ஜனரஞ்சன, டிசம்பர் மாதத்தில் ஓய்வு பெறவுள்ள தற்போதைய பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவின் பதவிக்காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடிப்பதே இந்தத் திருத்தத்தின் நோக்கமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் இந்த முயற்சி தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளதுடன், கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம், கொழும்பு நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம், பதுளை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சட்டத்தரணிகள் சங்கங்கள் அவர்களின் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன. பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கமும் ஜனாதிபதிக்கு அவர்களின் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், ஏதாவதொரு முறையில் இந்த திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் அது தவறான முன்னுதாரணமாகுமென சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோன்று, அது நீதிமன்ற நிர்வாகம் மற்றும் சுயாதீனத்தன்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான எதிர்ப்புகள் இருந்தபோதும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தன்னகம் வைத்துள்ள அரசாங்கம் இந்த புதிய அரசியலமைப்புத் திருத்தத்தை மிக விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிக்கொள்வதற்காக நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது



