பேராதனைப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் விழிப்புணர்வுப் போராட்டம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அலுவலக மற்றும் இதர ஊழியர்கள் (கல்விசாரா ஊழியர்கள்) நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஊழியர்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலும், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலும் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கங்களின் ஒன்றியத்தினால் நேற்று முந்தினம் (02) நண்பகல் விழிப்புணர்வுப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
பல்கலைக்கழகப் பொருட்களைக் கணக்கெடுக்கும் பணிக்கான சிறப்புப் பணம் மற்றும் வார இறுதி மேலதிக நேரக் கொடுப்பனவுகள் (OT) இதுவரை வழங்கப்படாமை, காலியாகவுள்ள ஊழியர் பணியிடங்களை நிரப்பாமை, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான உதவித் திட்டங்கள் இல்லாமை, சம்பளக் குறைபாடுகள், எம்.சி.ஏ (MCA) கொடுப்பனவுக் குறைப்பு மற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்காமை உள்ளிட்ட நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எதிர்க்கட்சியில் இருந்தபோது இக்கோரிக்கைகளுக்கு ஆதரவளித்த தற்போதைய அரசாங்கம், ஆட்சிக்கு வந்த பின்னர் போதிய கவனம் செலுத்தாதமை ஊழியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், பல்கலைக்கழகத்திற்கும் ஊழியர்களுக்கும் எதிராகச் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதும், ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதும் அரசாங்கத்தினதும் பல்கலைக்கழக நிர்வாகத்தினதும் கடமையாகும் என தொழிலாளர் சங்கங்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. (எம்.ஏ.ஏ)






