மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை தவிர்க்கத் தவறியமை – ரவி செனவிரத்னவிற்கு 2,500 ரூபா அபராதம்

2023 ஆம் ஆண்டு வெள்ளவத்தை மெரின் டிரைவ் (Marine Drive) வீதியில், மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கின் ஒரு குற்றச்சாட்டை, பொது பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கமைய, “வாகன விபத்தை தவிர்க்கத் தவறியமை” என்ற முதலாவது குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட அவருக்கு, 2,500 ரூபா அபராதம் விதித்து கல்கிஸை நீதவான் காஞ்சனா நிரஞ்சலா டி சில்வா கடந்த ஜூலை 9 ஆம் திகதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் முதலாவது குற்றச்சாட்டுக்குத் தண்டனை விதிப்பதற்காகவும், “அதிவேகமாக அல்லது ஆபத்தான முறையில் வாகனம் செலுத்துதல்” மற்றும் “மதுபோதையில் வாகனம் செலுத்துதல்” ஆகிய இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதா என்பது குறித்த தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த வழக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்தது.
அந்த இரண்டு குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை நடத்துவதற்கும், முதலாவது குற்றச்சாட்டுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்துவதற்கும் இந்த வழக்கு மீண்டும் வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



