News

தமிழ் முஸ்லிம் கட்சிகளின் இணைவு என்பது கூட்டணி அரசியல் அல்ல என மனோ கணேஷன் விளக்கம்

‘ஐக்கிய மக்கள் சக்தியில் நாங்கள் இணைந்து செயலாற்றவில்லை. ஐக்கிய மக்கள் முன்னணியிலேயே நாங்கள் செயலாற்றி வருகிறோம். தமிழ் முஸ்லிம் கட்சிகளின் இணைவு கூட்டணியல்ல. அதுவொரு பொது மேடை’’ என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.



மேலும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இடம்பெறும் சந்தேகத்துக்கிடமான மரணங்கள் குறித்து ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.



அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,



‘‘கபில சந்திரசேனவின் உயிரிழப்பின் பின்னர், ரங்க திசாநாயக்க ராஜபக்ஷ என்ற அதிகாரி உயிரிழந்தார். தற்போது முன்னாள் பொலிஸ் மா அதிபர் உயிரிழந்துள்ளார். 

இந்த உயிரிழப்புகள் விவாதத்துக்குரிய சந்தேகத்துக்கிடமான மரணங்கள். உண்மை என்னவென்பதை தேடி நாட்டுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. சமூக வலைத்தளங்கள் இதில் தலையிடக் கூடாது. இதற்கு சட்டமே தீர்வு கூற வேண்டும் தற்போதைய ஆளுங்கட்சியிலுள்ள முக்கிய உறுப்பினர் நந்தன குணதிலக்க சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைக்கிறார்.



இவ்வாறான விடயங்களில் நிலவும் சந்தேகத்துக்கிடமான மரணங்களின் உண்மைத் தன்மையினை அரசாங்கம் ஆராய வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு இருக்கிறது. இந்தச் சம்பவங்களை மூடிமறைத்து விடாமலும் சமூக ஊடகத்திலிருக்கும் பலத்தை பயன்படுத்தியும் இந்தப் பிரச்சினைகளை மூடிமறைக்கவும் முயற்சிக்கக் கூடாது.



இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியில் நாங்கள் இணைந்து செயலாற்றவில்லை. ஐக்கிய மக்கள் முன்னணியிலேயே நாங்கள் செயலாற்றி வருகிறோம். தமிழ் முஸ்லிம் கட்சிகளின் இணைவு கூட்டணியல்ல. அதுவொரு பொது மேடை.



நாங்கள் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் எங்களால் சுயாதீனமாக செயற்பட முடியும். ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருக்கவும் முடியும். வெளியேறவும் முடியும். ஆனால் நாங்கள் தொடர்ந்து கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் புதிய இணைவு தீர்வுகளுக்கான புதிய மேடை மாத்திரமே.



தமிழ் அடிப்படைவாதிகள் சிலரும் சிங்கள அடிப்படைவாதிகள் சிலரும் வேண்டுமென்றே தவறாக புரிந்துகொண்டு மக்களுக்கு கூற முயற்சிக்கிறார்கள். மக்களை காட்டிக்கொடுத்து விட்டதாகவும் இனவாதம் செய்வதாகவும் கூறுகிறார்கள். எங்கள் மத்தியில் இனவாதம் இல்லை’’ என்றார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button