News

பரீட்சை வினாத்தாள்களைச் சொந்தமாகத் தயாரிக்காமல், இணையத்தளங்களில் இருந்து அப்படியே தரவிறக்கம் செய்து பரீட்சார்த்திகளுக்கு வழங்கியதால் விஞ்ஞானப் பாடப் பரீட்சை இன்று மீண்டும் நடத்தப்படும் நிலை ஏற்பட்ட சம்பவம் வடக்கில் பதிவு

பரீட்சை வினாத்தாள்களைச் சொந்தமாகத் தயாரிக்காமல், இணையத்தளங்களில் இருந்து அப்படியே தரவிறக்கம் செய்து வழங்கியமையால், கிளிநொச்சி தெற்கு வலயத்தில் தரம் 7 மாணவர்களுக்கான விஞ்ஞானப் பாடப் பரீட்சை இன்று மீண்டும் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியரின் இத்தகைய அலட்சியப்போக்கால், கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட கிளிநொச்சி மகா வித்தியாலயம், முழங்காவில் மகா வித்தியாலயம் மற்றும் வட்டக்கச்சி மத்தியக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் தரம் 7 மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விஞ்ஞானம் மற்றும் சிங்களப் பாடப் பரீட்சைகள் இன்றைய தினம் மீண்டும் நடத்தப்படுகின்றன. பரீட்சைக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் கசிந்ததன் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், இதனால் சில பெற்றோர் கவலையும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாகக் கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் வினவியபோது, “விஞ்ஞானப் பாட வினாத்தாளில் 50 புள்ளிகளுக்குரிய வினாக்கள் முன்கூட்டியே கசிந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். எனவே, இது தொடர்பில் வினாத்தாளைத் தயாரித்த ஆசிரியரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, பெயர் குறிப்பிட விரும்பாத கல்வி அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “தரம் 7 விஞ்ஞானப் பாட வினாத்தாளைத் தயாரித்த ஆசிரியர், அதனைச் சொந்தமாகத் தயாரிக்காமல் மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஏற்கனவே நடத்தப்பட்ட பரீட்சை வினாத்தாளை இணையதளத்தில் தரவிறக்கம் செய்து, கிளிநொச்சி தெற்கு வலயத்திற்கான பரீட்சை வினாத்தாளைத் தயார் செய்துள்ளார். ஆனால், பரீட்சைக்கு முன்னதாகவே தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களும் அதே வினாத்தாளை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து மாணவர்களுக்குப் பயிற்றுவித்தமையினாலேயே இச்சிக்கல் ஏற்பட்டுள்ளது” எனச் சுட்டிக்காட்டினார்.

இதேபோன்று, சிங்களப் பாட வினாத்தாளும் கிளிநொச்சியிலுள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் முழுமையாக மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதை அடுத்து, அப்பாடத்திற்கான பரீட்சையும் மீண்டும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button