ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு பேரிடி விழுந்துள்ளது என தெரிவித்து சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அவசரக் கூட்டம்

நீதித்துறை தொடர்பான விடயங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது.
முந்தைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனநாயகக் கோட்பாடுகள், அரசாங்கத்தின் முத்தரப்பு முறைமை (சட்டமன்றம், நிறைவேற்றுத் துறை, நீதித்துறை), அதிகாரப் பகிர்வு மற்றும் அதிகாரச் சமநிலை ஆகியவற்றின் அடிப்படையில் விவாதம் ஒன்றை எதிர்க்கட்சியினர் கோரியிருந்தபோதிலும், அரசாங்கம் அதற்கு உடன்படவில்லை.
நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக விவாதிக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இத்தகைய விவாதத்திற்கு அனுமதி மறுப்பது ஜனநாயக ஆட்சியைப் பலவீனப்படுத்துகிறது என்றும் எச்சரித்துள்ளனர்.
நீதித்துறை சார்ந்த விடயங்கள் குறித்த விவாதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டமை ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு விழுந்த பேரிடி என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அடுத்து எடுக்கப்பட வேண்டிய நாடாளுமன்ற மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹிணி விஜேரத்ன, சித்ரால் பெர்னாண்டோ, வி. இராதாகிருஷ்ணன், சமிந்த விஜேசிறி, கயந்த கருணாதிலக்க, ஜே.சி. அலவத்துவல, சுஜித் சஞ்சய பெரேரா, கவிந்த ஜயவர்தன, சதுர கலப்பத்தி, கபீர் ஹாசிம், ரவி கருணாநாயக்க, எம்.எஸ்.ஏ. வசீத், ரோஹண பண்டார, டபிள்யூ.எச்.எம். தர்மசேன, பி. அரியவன்ச, தயாசிறி ஜயசேகர, அனுராத ஜயரத்ன, ஹர்ஷ டி சில்வா, ரிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அர்ச்சுனா இராமநாதன், நிஸாம் காரியப்பர், எம்.எஸ். உதுமாலெப்பே, சானக்க மதுகொட, சுரங்க ரத்நாயக்க மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


