இந்தியாவில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் புரட்சி செய்து வென்றது போல், இலங்கையிலும் ஒரு நாள் ஏற்படும் ; சஜித்

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம், விவசாயிகளினாலேயே வீடு செல்லும் காலம் வரக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்டம், மிஹிந்தலை தேர்தல் தொகுதி, நாச்சியாதீவு பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இன்று நெற்செய்கை உள்ளிட்ட விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
பல சவால்கள் மற்றும் துயரங்களுக்கு மத்தியில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பிள்ளைகளின் கல்விக்குக் கூட வலுவூட்ட முடியாதவாறு தற்போதைய அரசாங்கம் விவசாயத்தை அழிக்கும் கொள்கையில் ஈடுபட்டுள்ளது.
நகைநட்டுக்களை அடகு வைத்து, வட்டிக்குப் பணம் பெற்று விவசாயத்தைத் தொடங்கினாலும், இன்று விவசாயத்திற்குத் தேவையான தரமான விதைநெல் இல்லை.
உரிய நேரத்தில் உர மானியம் கூட இவர்களுக்கு கிடைப்பதில்லை. கிடைக்கும் உரமும் கூட தரமற்றதாக காணப்படுகின்றன.
விவசாய இரசாயனங்கள், உரம் மற்றும் விவசாய உபகரணங்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. விவசாயியை இவர்கள் கடவுள் என்று கூறினாலும் விவசாய உபகரணங்களுக்கு அரசாங்கம் VAT வரி விதித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
யானை – மனித மோதல் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு மத்தியில் செய்கைகளை மேற்கொண்டாலும், அறுவடை செய்த பிற்பாடு அவ்வாறு பெறப்படும் அறுவடைக்கு நியாயமான நிலையான குறிப்பிட்ட விலை இந்த விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.
இன்று ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாவதாக விவசாய அமைச்சரே கூறிவிட்டு, நிலையான விலையை 120 ரூபாவாக ஆக்கியுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு தேர்தல் காலத்தில் விவசாயி ராஜாவாகத் தெரிந்தாலும், தேர்தலின் பின்னர் விவசாயிகள் நட்டமடைய வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அன்று 5,000 ரூபாய் உரம் வேண்டாம் என்று கூறி அநுர குமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக்கி இறுதியில் விவசாயிகள் துயரப்படுகின்றனர்.
அரசாங்கத்தின் திறைசேரியில் பணம் நிரம்பியிருந்தும் உரிய நிவாரணங்களை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி அங்கு வேலையின்றி அவதியுறும் இளைஞர்களை கரப்பான் பூச்சி என அழைத்ததால், இளைஞர்கள் ஒன்றிணைந்து கரப்பான் பூச்சி மக்கள் கட்சியைத் ஆரம்பித்து, மேற்கொண்ட புரட்சி புதுடெல்லிக்கு வரை வந்த காரணத்தினால் இந்தியக் கல்வி அமைச்சர் இராஜினாமா செய்துள்ளார்.
நமது நாட்டு விவசாயிகளை கசிப்புக்காரன் என அழைக்கும், செயற்கை விவசாயிகள் என அவமதிக்கும் இந்த அரசாங்கத்தின் முடிவை இந்த விவசாய சமூகமே ஒருநாள் தீர்மானிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



