News

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து: ஒருவர் பலி, ஒருவர் காயம் – சாரதிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதால் கல்முனையில் இடம்பெற்ற அசம்பாவிதம்

பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக வட்டா (Vatta) வாகனம், தாழவட்டுவான் சந்தியை நெருங்கியபோது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரத்தில் அமைந்திருந்த ‘அபிவிருத்தி லொத்தர்’ விற்பனை நிலையத்திற்குள் அதிவேகமாக மோதித் தலைகீழாகப் புரண்டதில், விற்பனை நிலையத்தின் தூண்கள் பலத்த சேதமடைந்து கடை தரைமட்டமானது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த வாகனச் சாரதியும், லொத்தர் கடை உரிமையாளரும் உடனடியாக மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சைப் பலனின்றி வாகனச் சாரதி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த கமகே சுனில் சாந்த (63 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதேவேளை, விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் லொத்தர் விற்பனை நிலையத்தின் உரிமையாளரான மூர்த்திதம்பி வேணு தாஸ் (56 வயது) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button