ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்து சொத்துக்களை மறைக்க முயற்சிப்பது ஏன்… – ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் கேள்வி

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மிக முக்கியமான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களில் ஒன்றான, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனங்களுக்கான பொதுமக்களின் அணுகலை பலவீனப்படுத்தும் உத்தேச திருத்தங்களை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் அரசாங்கத்தை கடுமையாக வலியுறுத்துகிறது.
தமது சொத்துக்கள்-பொறுப்புக்களை பிரகடனப்படுத்துவதன் மூலம் பொதுமக்களிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றுள்ளவர்கள் தமது சொந்த சொத்துக்கள், பொறுப்புக்கள் மற்றும் நிதி உரிமைகளை வெளிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்தப்படாத சொத்துக்கள், முரண்பட்ட நலன்கள் மற்றும் ஊழல் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களை மறைப்பதற்கு எதிரான ஒரு முக்கிய பாதுகாப்பு முறையாக இது செயல்படுகிறது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்தப் பிரகடனங்களை நிர்வகிப்பதற்கும் அவற்றின் திருத்தப்பட்ட (உணர்திறன் வாய்ந்த தகவல்கள் மறைக்கப்பட்ட) பிரதிகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்குமான மத்திய அதிகாரியாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) செயற்படுகிறது.
சொத்துக்கள்-பொறுப்புக்கள் பிரகடனங்களை பொதுமக்கள் பகிரங்கமாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிப்பது, இலங்கையின் ஊழல் தடுப்புப் போராட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு பாரிய முற்போக்கான படியாகும். ‘பொதுமக்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தும் நபர்கள் பொதுமக்களின் கண்காணிப்புக்கு திறந்திருக்க வேண்டும்’ என்ற கொள்கைக்கு நடைமுறை அர்த்தத்தை கொடுக்க இது உதவியது. இந்த சொத்து பொறுப்பு பிரகடனங்களுக்கு அர்த்தமுள்ள அணுகல் இருப்பதன் மூலம் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர், அறிஞர்கள் மற்றும் குடிமக்களுக்கு, சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களில் உள்ள முரண்பாடுகளை அடையாளம் காணவும், ஏற்படக்கூடிய நலன் சார் முரண்பாடுகளை வெளிப்படுத்தவும் முடிகிறது.
அத்துடன் அரச அதிகாரிகளின் சொத்துக்களை அவர்களின் சட்டபூர்வமான வருமானத்தின் மூலம் விளக்க முடியுமா என்பது குறித்து கேள்வி எழுப்பவும் முடிகிறது. இத்தகைய பொது கண்காணிப்பு இல்லாமல், சொத்து – பொறுப்பு பிரகடனங்களைப் பெறுவதற்கான ஒரு நடைமுறையைப் பேணுவது என்பது, பொறுப்புக்கூறலுக்கான பயனுள்ள கருவியைப் பேணுவதற்குப் பதிலாக, வெறும் பெயரளவு நிர்வாகக் கருவியைப் பேணுவது மட்டுமேயாகும்.
2026 ஜூலை 24 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஊழல் தடுப்பு (திருத்த) சட்டமூலத்தின் மூலம் இந்த சீர்திருத்தம் பின்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.
மிக மோசமான விடயம் என்னவென்றால், சட்டத்தின் மூலமே பொதுமக்களுக்கு திறந்த நிலையில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை, பொதுமக்கள் பயன்படுத்துவதை இந்தச் சட்டமூலம் ஒரு குற்றச் செயலாக்குவதாகும். சட்டமூலத்தின்படி, சொத்து-பொறுப்பு பிரகடனத்தைப் பயன்படுத்துவது, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிறுவனத்திற்கோ அல்லது அதிகாரிக்கோ சமர்ப்பிக்க மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது பொதுக் கண்காணிப்பு, சிறந்த நிர்வாகத்தின் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் மற்றும் தகவலறிந்த பொது உரையாடலுக்கு இடமளிக்கும் ஒரு கருவியின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் இல்லாமல் செய்கிறது.
சட்டபூர்வமாக பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதை குற்றமாக்குவது, தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை கடுமையாக மீறும் செயலாகும். மேலும், மறைக்கப்பட்ட சொத்துக்கள், நலன் சார் முரண்பாடுகள் மற்றும் பதவியைத் துஷ்பிரயோகம் செய்தல் ஆகியவற்றை வெளிப்படுத்தக்கூடிய ஒட்டுமொத்த பொதுமக்களின் சுறுசுறுப்பான கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை சோர்வடையச் செய்யவும் இது வழிவகுக்கும்.
மேலும், தெளிவான அளவுகோல்களை விதிக்காமல், தனிப்பட்ட தனியுரிமைக்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படும் எந்தவொரு தகவலையும் திருத்துவதற்கு (மறைப்பதற்கு) பரந்த அதிகாரத்தை இந்தச் சட்டமூலம் மத்திய அதிகாரியான இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்குகிறது.
இதன் விளைவாக, அர்த்தமுள்ள பொதுக் கண்காணிப்புக்கு அவசியமான தகவல்களைக் கூட பொதுமக்களிடமிருந்து மறைத்து வைக்கும் பாரிய அபாயம் உருவாகிறது. பொது அதிகாரத்தைப் பயன்படுத்தும் நபர்களின் நிதி உரிமைகள் குறித்து நியாயமான முறையில் மதிப்பிட பொதுமக்களுக்கு முடியாதவாறு இந்தப் பிரகடனங்களில் உள்ள உணர்திறன் வாய்ந்த தகவல்கள் அதிகளவில் நீக்கப்பட்டால், இத்தகைய பொது அணுகலால் ஏற்படும் பயன் மிகக் குறைவே.
இதற்கும் மேலாக, தற்போதைய ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, சொத்து-பொறுப்பு பிரகடனப்படுத்துபவருடன் குறைந்தது ஆறு மாதங்களாவது ஒன்றாக வாழ்ந்த ஒரு நபரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற தேவையை இந்தச் சட்டமூலம் நீக்குகிறது. ஒரு அரச அதிகாரி சம்பந்தப்பட்ட சொத்துக்களைக் கட்டுப்படுத்தும், பயன்படுத்தும் அல்லது அவற்றிலிருந்து நன்மைகளைப் பெறும் அதே வேளையில், அந்தச் சொத்துக்களை அந்த அதிகாரியுடன் வாழும் துணை அல்லது வேறு ஒரு நபரின் பெயருக்கு மாற்றும் சாத்தியம் உள்ளது.
இந்தத் தகவல்களை நீக்குவதன் மூலம் சொத்துக்களை மறைப்பதற்கான தெளிவான வழி திறக்கப்படுவதோடு, பிரகடனங்களின் துல்லியத்தை உறுதிப்படுத்தவும், உண்மையான பயனாளிகளின் உரிமையாளர்களை அடையாளம் காணவும், சட்டவிரோதமான அல்லது முறையற்ற முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைக் கண்டறியவும் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் உள்ள திறனை இது மேலும் கடினமாக்குகிறது.
ஊழலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல் ஆகிய தெளிவான கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னணியில், இந்தத் திருத்தங்களைக் கொண்டுவருவது மிகவும் கவலைக்குரியதாகும். குறிப்பாக ஊழல் ஆட்சி செய்ய அனுமதிக்கும் இரகசியத்தன்மை மற்றும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை ஒழிப்பதற்காகவே அரசாங்கத்திற்கு உரிய மக்கள் ஆணை கிடைத்தது.
சொத்து – பொறுப்பு பிரகடனங்களைச் சமர்ப்பிப்பதற்கான கட்டமைப்பை பலவீனப்படுத்துவது அந்த மக்கள் ஆணையை நேரடியாக மீறுவதாகும். ஊழல் தடுப்பு வாக்குறுதிகளின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்த ஒரு அரசாங்கம், சொத்துக்களை மறைப்பதை எளிதாக்கவும், அரச அதிகாரிகளின் சொத்துக்களை பரிசோதிப்பதை மேலும் கடினமாக்கவும், பகிரங்கமாக வெளியிடப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தும் உரிமையுள்ள குடிமக்களை சிறையில் அடைக்கும் அபாயத்திற்கு உட்படுத்தவும் இப்போது செயல்பட முடியாது.
எனவே ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் அரசாங்கத்திடம் பின்வருமாறு கோருகிறது:
• சொத்து – பொறுப்பு பிரகடனத்தை சட்டபூர்வமாக மக்கள் நலனுக்காகப் பயன்படுத்துவது தொடர்பாக விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் குற்றவியல் குற்றத்தை நீக்குமாறு;
• சொத்து- பொறுப்பு பிரகடனப்படுத்துபவருடன் ஒன்றாக வாழும் மற்றும் பரஸ்பர உரிமைகள் மற்றும் பொறுப்புக்களைப் பகிர்ந்துகொள்ளும் நபர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதிலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், அவர்களுக்குத் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற தேவையை அதே வழியில் பேணுமாறு; மற்றும்
• நிறுத்தி வைக்கப்பட வேண்டிய தகவல்கள் என்ன என்பதைத் தீர்மானிக்க மத்திய அதிகாரிக்கு பரந்த அதிகாரங்களை வழங்குவதற்குப் பதிலாக, திருத்தப்படக்கூடிய (மறைக்கப்படக்கூடிய) தகவல்கள் என்ன என்பதை சட்டத்தின் மூலம் தெளிவாகவும் குறுகிய வகையிலும் வரையறுக்குமாறு.



