நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நீதி மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான அரசாங்கத் தூதுக்குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகளை சந்தித்து தெளிவுபடுத்தியது

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நீதி மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான அரசாங்கத் தூதுக்குழுவொன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) பிரதிநிதிகளை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தது.
பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் மற்றும் பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி ஸாலிஹ் ஆகியோர் அடங்கிய இத்தூதுக்குழு, கொழும்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூரமித் மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்களைச் சந்தித்தது.
நீதித்துறை மற்றும் சிறைச்சாலைத் துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்தே இக்கலந்துரையாடலில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், நீதித்துறை அமைப்பு குறித்து சமூகத்தில் பரவி வரும் தவறான தகவல்கள் தொடர்பிலும் அரசாங்கப் பிரதிநிதிகள் தெளிவுபடுத்தினர்.
சீர்திருத்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் தூதுக்குழுவினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு விளக்கமளித்தனர்.



