சிபெட்கோவினால் திறைசேரி கடன் அடைக்கப்பட்டது.. நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் வரியை நீக்குவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்திற்கு வாய்ப்பு …

இலங்கை கனிம எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம், இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (சைபெட்கோ) நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் வரியை நீக்குவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்திற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அச்சங்கத்தின் பிரதிநிதிகள், குறித்த நஷ்டம் தற்போது முழுமையாக ஈடுசெய்யப்பட்டுள்ளதால், இந்த வரியை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்வது அவசியமற்றது என சுட்டிக்காட்டினர்.
மேலும், தற்போது அமலிலுள்ள QR நடைமுறை மற்றும் எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதால், அவற்றையும் நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இது தவிர, எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18% கூட்டுச் சேர்க்கை வரி (VAT) மற்றும் விநியோகஸ்தர்களின் கமிஷன் தொகையை 3 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாகக் குறைத்துள்ளமை காரணமாகத் தாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இலங்கைக்கு புதிதாக வருகை தந்துள்ள சினோபெக் (Sinopec), ஐ.ஓ.சி (IOC) மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks) போன்ற நிறுவனங்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும், இது தொடர்பில் அதிகாரிகள் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கனிம எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


