News

வெறும் பேச்சு மட்டுமே.. இறுதியில் இருந்ததும் இல்லாமல் போய்விட்டது.. – பிரதமரின் முகத்திற்கு நேராகவே ஆதிவாசி தலைவர் வண்ணிலஎத்தோ குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், தாம் பாராளுமன்றத்திற்குச் சென்று பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து ஆதிவாசிகளின் பிரச்சினைகள் குறித்து விவாதித்த போதிலும், இதுவரை அதற்கு எவ்வித சாதகமான முடிவும் கிடைக்கவில்லை என ஆதிவாசி தலைவர் உருவரிகே வண்ணிலஎத்தோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற ஆதிவாசிகள் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆதிவாசிகள் சட்டத்திற்கு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்பட்டு முடிந்துவிட்டதாகத் தகவல்கள் கிடைத்தபோதிலும், அது இதுவரை வெளியிடப்படாமை கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட போதிலும், இறுதியில் தங்களிடம் இருந்த உரிமைகள் கூட பறிபோகும் நிலைமை உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் பிரதமரைச் சந்தித்து இது குறித்துப் பேசினோம். வர்த்தமானியும் தயாராக உள்ளது என்று கூறினார்கள். ஆனால் இறுதியில் பார்த்தால் இருந்ததும் இல்லாமல் போய்விட்டது” என வண்ணிலஎத்தோ தனது ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.

ஆதிவாசிகளின் பாரம்பரிய உரிமைகள் மற்றும் தலைமுறை தலைமுறையாக உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கலாச்சார மற்றும் சுற்றாடல் அமைச்சர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்கள் எனத் தாம் எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவர்களுக்குப் பதிலாக திணைக்களங்களின் கீழ்மட்ட அதிகாரிகளை மட்டுமே அனுப்பியது குறித்து தாம் கவலையடைவதாகவும் அவர் கூறினார்.

தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இல்லாத அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் ஆதிவாசி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்றும் உருவரிகே வண்ணிலஎத்தோ மேலும் வலியுறுத்தினார்.

Recent Articles

Back to top button