News

இலங்கையில் இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகளுக்காக 25,000க்கும் அதிகமான நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில்!

நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளுக்காக 25,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் காத்திருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அக்கூட்டமைப்பின் தலைவரான நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ சுட்டிக்காட்டுகையில்; இந்தக் காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகளின் அறுவை சிகிச்சைகளை விரைவுபடுத்துவதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், அந்தத் திட்டம் இதுவரை தீவிரமாகச் செயல்படுத்தப்படாதது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

ஏழை நோயாளிகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒதுக்கப்படும் தொகையை அதிகரித்து, அரசு மருத்துவமனைகளின் காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகள் குறிப்பிட்ட கட்டணங்களுக்கு உட்பட்டு தனியார் துறையிலாவது அறுவை சிகிச்சைகளைச் செய்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால், அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்கி, நாளொன்றுக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுதவிர, சம்பந்தப்பட்ட துறைகள் சார்ந்த நிபுணத்துவ மருத்துவர்களைப் பயிற்றுவிக்கும் திறனை அதிகரிப்பது, மருத்துவமனை வசதிகளை மேம்படுத்துவது, நவீன அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் பரிசோதனை சாதனங்களைக் கொள்முதல் செய்வதன் மூலம் எதிர்காலத்தில் இந்த நெரிசலைக் குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள இதய அறுவை சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் 2029 ஆம் ஆண்டு வரை நீடிப்பதோடு, சிறுநீரகம் மற்றும் ஏனைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக தினமும் நோயாளிகள் சேர்க்கப்படுவதால், முழு சுகாதார அமைப்பும் தாங்க முடியாத அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ மேலும் வலியுறுத்தினார்.

Recent Articles

Back to top button