News

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரத்திற்கு சுகாதார அமைச்சர், சுமந்திரன் போன்றோர்கள் தலையிட்டு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரத்திற்கு சுகாதார அமைச்சர், சுமந்திரன் போன்றோர்கள் தலையிட்டு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்

நூருல் ஹுதா உமர்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அண்மையில் ஏற்பட்டுள்ள மத, கலாச்சாரத்தை பேணும் உடை சர்ச்சைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க இலங்கை தமிழசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தலையிட்டு, தமிழ் – முஸ்லிம் நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட வைத்தியசாலை நிர்வாகத்துடனும் சமூகத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். அதேவேளை, சுகாதார அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு இவ்விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அந்த அறிக்கையில்,

கல்முனை என்பது தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ, பௌத்த மக்கள் நீண்டகாலமாக ஒற்றுமையுடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வரும் பிரதேசமாகும். இங்கு அரசியல் உரிமை சார்ந்த நிலம், நிர்வாகம், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் மத, கலாச்சார முரண்பாடுகள் அங்கிருக்கும் தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் கடந்த பல நூற்றாண்டுகளாக ஏற்பட்டதாக இல்லை. கலாச்சார விடயங்கள் இப்பிரதேசங்களில் வாழும் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ, பௌத்த மக்களிடம் ஒரு புரிந்துணர்வு காலகாலமாக இருந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட கல்முனை உப பிரதேச செயலகத்தில் மத வழிபாட்டு தளம் அமைத்தது தொடர்பில் பிரச்சினை ஏற்பட்ட போது பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின் ஊடாக ஒருசில தினங்களிலையே சுமூகமாகத் தீர்க்கப்பட்ட அனுபவம் எமக்கு உள்ளது. இதற்கு சான்றாக கல்முனை மாநகர அன்றைய முதல்வர் மற்றும் தமிழ்- முஸ்லிம் மாநகர சபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதேபோன்று, தற்போதைய கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரத்தையும் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடாக மாற்றாமல், பொறுப்பான முறையில் அணுகி தீர்வு காண வேண்டும்.

இந்த நிலையில், கல்முனை தமிழ் மக்களுக்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்காடி வரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கைதேர்ந்த சட்டத்தரணி மட்டுமில்லாது தமிழ் முஸ்லிம் ஐக்கியத்தை வலியுறுத்தி வருபவர். இலங்கை அரசியலமைப்பு சட்டம் மற்றும் பொதுநிர்வாக அமைச்சின் சுற்றுநிருபங்கள், சட்டங்கள் தொடர்பில் நன்றாக அறிந்தவர். ஆதலால் கல்முனை ஆதார வைத்தியசாலையில் நியமனம் பெற்றிருக்கும் இந்த முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாச்சாரத்தை பேணும் ஆடை உரிமையை உறுதிப்படுத்த வைத்திசாலை நிர்வாகம் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி இந்த விடயத்தை மனித நேயம், சமூக ஒற்றுமை என்பவற்றை முன்னிறுத்தி சுமூகமாக தீர்க்க உடனடியாக களத்தில் இறங்கி செயற்பட வேண்டும்.

ஏனெனில் இது கல்முனை பிரதேசத்திற்கு மட்டுமான பிரச்சினை என்றில்லாமல் எமது நாட்டு முஸ்லிங்கள் இதனை பாரதூரமான பிரச்சினையாக நோக்குவதால், இது சமூக ஒற்றுமைக்கு ஆபத்தாக அமைந்துள்ளதால் உடனடியாக தீர்வை பெறவேண்டியது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button