News

நபர் ஒருவரால் காது கடிக்கப்பட்ட பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸார் மற்றும் அதிகாரிகளுக்கு பரிந்துரைகளை முன்வைத்தது

ஆர். எப். எம். சுஹைல்

நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலின்போது அயல் நபர் ஒருவரால் காது கடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சீத்தாஎலிய, போலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நுவரெலியா பொலிஸார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்துப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் ‘United Human Rights Organization’ அமைப்பினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட HRC/HAT/58/26/N என்ற முறைப்பாட்டை விசாரணை செய்த பின்னரே இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா – ஹட்டன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தினால் 2026 ஜூலை 31ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் குறித்த பரிந்துரை நுவரெலியா பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தரப்பு தெரிவிக்கிறது.

முறைப்பாட்டின்படி, சீத்தாஎலிய, போலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த நோனா பட்டோன் என்பவருக்குச் சொந்தமான காணி தொடர்பில் அயல் நபர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காணிக்கு முன்னால் அமைந்துள்ள பாதையைப் பயன்படுத்துவதற்கு நோனா பட்டோன் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவரது காதைக் குறித்த நபர் கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் 2026 மார்ச் 4ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த காலங்களில் ஊடகங்களிலும் வெளியாகி, பிரதேசத்தில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், சம்பவம் தொடர்பில் உரிய முறையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரின் செயற்பாடுகள் தொடர்பிலும் சில விடயங்கள் வெளிப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தரப்பு தெரிவிக்கிறது.

அத்துடன், பெண்ணின் காதைக் கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சில சந்தர்ப்பங்களில் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை காணப்பட்டதாகவும், இதன் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது தரப்பினரிடையே மத அடிப்படையில் வேறுபாடு காட்டப்பட்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணைகள் நியாயமானதும் பாரபட்சமற்றதுமான முறையில் இடம்பெற்றனவா என்பது தொடர்பிலும் மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1996ஆம் ஆண்டு 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையிலேயே இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஆறு மாதங்கள் நெருங்கியும் நீதியைப் பெறவில்லை”
இது தொடர்பில் கருத்து தெரிவித்த, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டைத் தாக்கல் செய்த ‘United Human Rights Organization’ அமைப்பின் பணிப்பாளர் பிரணீதா வர்ணகுலசூரிய, சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களை நெருங்கியுள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

“நுவரெலியா பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் ஒருதலைப்பட்சமான முறையில் செயற்பட்டுள்ளனர். குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட தரப்பினர் கூறிய விடயங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதே தவிர, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான முறையில் தலையீடு செய்யப்படவில்லை” என அவர் தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தரின் செயற்பாடுகள் தொடர்பிலும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரணீதா வர்ணகுலசூரிய, “கிராம உத்தியோகத்தரும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை விட, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட தரப்பினரின் கருத்துக்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளதாக எமக்குத் தெரியவந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

இவ்வாறான சூழ்நிலையில் அரச அதிகாரிகள் தமது கடமைகளை நிறைவேற்றும்போது தனிநபர்களின் மதம் அல்லது வேறு பின்னணிகளின் அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது என வலியுறுத்திய அவர், அனைத்து தரப்பினருக்கும் சமமான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

“பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் நாம் கோருவது, இந்தப் பிரச்சினை தொடர்பில் வெளிப்படையான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதாகும்” என பிரணீதா வர்ணகுலசூரிய மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button