News

நிலக்கரி மோசடியில் ஜனாதிபதிக்கு தொடர்பிருப்பதாகக் கூற என்னிடம் ஆதாரங்கள் உள்ளன… – சம்பிக்க

30 நிலக்கரி கப்பல்களைக் கொள்முதல் செய்ததில் நடைபெற்றதாகக் கூறப்படும் பாரிய மோசடியில் ஜனாதிபதிக்குத் தொடர்பிருப்பதாகக் கூறுவதற்குத் தேவையான போதுமான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக தெரிவித்துள்ளார்.

இணையதள நாளையொன்றின் கலந்துரையாடலில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இரண்டு முறைப்பாடுகளைத் தான் சமர்ப்பித்துள்ளதாகவும் ரணவக வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் முதலாவது முறைப்பாடு, ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

“தங்கள் ஆட்களை விடுவிப்பதற்கும், பழையவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கும்” ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று டில்வின் சில்வா கூறிய கூற்றின் மூலம் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மைக்குக் பாதிப்பு ஏற்படுவதாக அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாவது முறைப்பாடாக, 30 நிலக்கரி கப்பல்களை மோசடியான முறையில் கொள்முதல் செய்தமை தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயகவுக்கு எதிராகக் காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் செயற்பாட்டின் காரணமாக நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு மற்றும் மின்வெட்டுக்கு வழிவகுத்த காரணங்கள் குறித்து அறிவியல் பூர்வமான மற்றும் இதர ஆதாரங்களை ஆணைக்குழு முன் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இது குறித்து நான் பொலிஸாரிடமும் வாக்குமூலம் அளித்துள்ளேன். இது வெறும் வதந்தி அல்ல, அறிவியல் பூர்வமான தரவுகளைக் கொண்ட முறைப்பாடு. ஆணைக்குழுவின் ஆறு மாத கால அவகாசம் முடிந்த பிறகு அவர்களின் அறிக்கை வெளியாகும் வரை காத்திருக்கிறேன். அதன் பின்னர் என்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை மக்கள் முன் பகிரங்கப்படுத்தத் தயராக உள்ளேன்” என்றும் பாடலி சம்பிக்க ரணவக மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button