News

கல்முனை வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் சுகுணன் சுகாதார சுற்றுநிருபங்களின்படியே செயற்பட்டுள்ளார்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளதாகவும், இந்த அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும் என்றும் அதை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் ஈரோஸ் (EROS) அமைப்பின் செயலாளர் இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கல்முனை வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் சுகுணன் சுகாதார சுற்றுநிருபங்களின்படியே செயற்பட்டுள்ளார். இதனை மத அல்லது கலாச்சாரப் பிரச்சினையாக திசைதிருப்பி இன முறுகலை ஏற்படுத்தச் சிலர் முயல்கின்றனர். டொக்டர் சுகுணனை பதவி விலக்கக் கோருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

:உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரானை எம்பி ஹிஸ்புல்லா சந்தித்தது தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் (CID) அரசாங்கமும் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.

ஓட்டமாவடி காளி கோயில் காணி அபகரிக்கப்பட்டமை மற்றும் ஏறாவூர் ஐயங்கேணியில் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக தயார்படுத்தப்பட்ட 26 ஏக்கர் பரம்பரை காணி சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டமை குறித்து விசாரணை தேவை. மேலும், அனுமதியின்றி 500 ஏக்கரில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் நிதி மூலங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்து புலனாய்வு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

தமிழ் அரசியல் தலைமைகள் மக்களை ஏமாற்றும் அரசியலையே முன்னெடுத்து வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் ஆறு தமிழ் பேசும் கட்சிகள் இணைந்துள்ளமை உண்மையான தீர்விற்காக அல்லாமல், தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு நாடகமாகும்.

ஹிஸ்புல்லா மற்றும் அவரது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஈரோஸ் கட்சி சட்டத்தின் ஊடாக உச்சக்கட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளது என இரா.பிரபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recent Articles

Back to top button