News

நாடு மீண்டும் திவால் நிலையை எதிர்நோக்கும் அபாயம்.. 15 பில்லியன் டொலர் தேவை.. கைவசம் 7 பில்லியன் மட்டுமே.. மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டம் முடிகிறது..

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தத் தவறினால், 2028 ஆம் ஆண்டின் இறுதியில் நாடு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எழுதிய “யுத தெக்கட உர தீ” (இரண்டு போர்களை எதிர்கொண்டு) புத்தக வெளியீட்டு விழாவில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் அறிக்கைகளின்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளிநாட்டு கையிருப்பு 8 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், 2028 ஆம் ஆண்டில் கடன் மறுசெலுத்தலைத் தொடங்க வேண்டுமானால் அது 15 பில்லியன் டொலர்களாக உயர வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், எஞ்சிய 7 பில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு தற்போதைய அரசாங்கத்திடம் எந்தவொரு தெளிவான திட்டமும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

கடந்த பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியாவிடமிருந்து 4 பில்லியன் டொலர்களும், வங்காளதேசத்திடமிருந்து 100 மில்லியன் டொலர்களும் உதவியாகக் கிடைத்ததையும், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் வழங்கிய உதவிகளின் அடிப்படையில் நாடு ஸ்திரப்படுத்தப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கை நிறைவடைவதால், அதன் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறினார்.

பொருளாதார மாற்றச் சட்டம் போன்ற முக்கியமான சட்டக் கட்டமைப்புகளுக்குப் புறம்பாகச் செயற்படுவதன் மூலம் நாடு மீண்டும் திவாலாகும் அபாயம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் பாராளுமன்றத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ சரியான உரையாடல்கள் கட்டியெழுப்பப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2028 ஆம் ஆண்டில் வரவிருக்கும் இந்தத் தீர்க்கமான பொருளாதார சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டுமானால், வெளிநாட்டு வருமான வழிகளை விரைவாக விரிவுபடுத்த வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க மேலும் வலியுறுத்தினார்.

Recent Articles

Back to top button