தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள சில தமிழ் கட்சிகள் கையில் எடுத்துள்ள ஆயுதமே இன**வாதம்! –
“ஹிஸ்புல்லாஹ் மீதான வன்மம் இளம் தலைமுறையினரிடம் எடுபடாது!”
✍️எஸ். சினீஸ் கான்
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல், பல தசாப்தங்களாக நிலவிவந்த பாரம்பரிய அரசியல் போக்குகளிலிருந்து மாறுபட்டு, புதியதொரு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களும், இளம் தலைமுறையினரிடையே உருவாகியுள்ள புதிய அரசியல் சிந்தனைகளும் குறிப்பிடத்தக்கவையாகும்.
ஊழலற்ற நிர்வாகம், சமத்துவம், சமூக நீதி மற்றும் இன, மத பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இளைஞர்களிடையே வலுப்பெற்று வருகிறது. தேசிய மக்கள் சக்தி மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் மீது இளைஞர்களில் பெரும் பகுதியினர் வெளிப்படுத்தி வரும் நம்பிக்கை, இலங்கையின் அரசியல் வரலாற்றில் உருவாகிவரும் புதிய மாற்றத்தின் முக்கிய அறிகுறியாகக் கருதப்படலாம்.
இத்தகைய மாற்றம், கடந்த காலங்களில் இனவாத உணர்வுகளையும் சமூகப் பிரிவினைகளையும் அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்திய சில பாரம்பரிய அரசியல் சக்திகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. மக்கள் புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தங்களது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள முயலும் சில தரப்பினர் மீண்டும் பழைய இனவாத அரசியல் அணுகுமுறைகளை முன்னெடுக்க முற்படுகின்றனர்.
• பழைய கதைகளும் புதிய பிரிவினை முயற்சிகளும்.
தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவாகி வரும் புதிய அரசியல் விழிப்புணர்வையும், தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிக்கின்ற புதிய தலைமுறையின் போக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாத சில அரசியல் சக்திகள், பழைய குற்றச்சாட்டுகளையும் ஆதாரமற்ற கருத்துக்களையும் மீண்டும் முன்னிறுத்தி மக்களின் சிந்தனைகளைத் திசைதிருப்ப முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது.
இதனுடன் இணைந்து, பெருமளவிலான பணச் செலவுகளும், குறிப்பிட்ட அரசியல் நோக்கங்களுடன் செயல்படும் சில ஊடகங்களும், சமூக ஊடக தளங்களும் பயன்படுத்தப்படுகின்றன என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களை இலக்கு வைத்து முன்வைக்கப்படும் சில குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். எந்தவொரு குற்றச்சாட்டாக இருந்தாலும், அது ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை நியதி.
அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, ஒருவரை ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது சமூக நல்லிணக்கத்திற்கும் ஜனநாயக அரசியல் கலாச்சாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும்.
இத்தகைய பிரசாரங்களின் பின்னணியில் காணப்படும் அரசியல் நோக்கங்கள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டியுள்ளது:
– தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிக்கும் தமிழ் இளைஞர்களைத் திசைதிருப்புவது;
– அச்சம், சந்தேகம் மற்றும் காழ்ப்புணர்ச்சியை உருவாக்கி, இளைஞர்களை மீண்டும் இனவாத அரசியலுக்குள் கொண்டு செல்வது,
– மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்றுள்ள அரசியல் பிரதிநிதிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது,
– பழைய அரசியல் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த முயல்வது.
போன்றவற்றை செயற்படுத்துவதற்கான திட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்திலும், குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில உறுப்பினர்களின் உரைகளிலும் வெளிப்படும் கருத்துக்களை மக்கள் அவதானித்து வருகின்றனர். ஜனநாயகத்தில் விமர்சனத்திற்கும் கருத்து வேறுபாட்டிற்கும் இடமுண்டு. ஆனால், அந்த விமர்சனம் இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தாத வகையிலும், உண்மைகள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருப்பது அவசியமாகும்.
• இளம் தலைமுறையின் தெளிவும் எதிர்காலமும்.
எத்தனை திட்டமிட்ட பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், இன்றைய இளம் தலைமுறை கடந்த காலத்தைப் போல எளிதில் அரசியல் பிரசாரங்களுக்கு இரையாகிவிடும் நிலையில் இல்லை.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு தரப்புகளின் கருத்துக்களையும் தகவல்களையும் ஒப்பிட்டு ஆராயும் வாய்ப்பு இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது. எனவே, ஒரு குறிப்பிட்ட அரசியல் தரப்பு முன்வைக்கும் கருத்தை மட்டும் நம்பாமல், அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் புதிய தலைமுறையிடம் வளர்ந்து வருகிறது.
கடந்த காலத்தின் கசப்பான அரசியல் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட இளைஞர்கள், வெறும் இனவாத முழக்கங்களாலும் பழைய அரசியல் கதைகளாலும் இனிமேல் தங்களை வழிநடத்த அனுமதிக்கக் கூடாது.
ஒரு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பது இன அடையாளங்களை மையப்படுத்திய அரசியல் போட்டியல்ல. மாறாக, கல்வி, பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு, நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி, சமூக நீதி மற்றும் இன நல்லிணக்கம் ஆகியவற்றை முன்னிறுத்தும் அரசியலாகும்.
எனவே, தமிழ் இளைஞர்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் போது, எந்தவொரு கட்சியையும் அல்லது அரசியல் தலைவரையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதற்குப் பதிலாக, அவர்களின் கொள்கைகள், செயல்பாடுகள் மற்றும் மக்களுக்கான பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட வேண்டும்.
இலங்கையின் எதிர்கால அரசியல், பழைய பிரிவினை அரசியலிலிருந்து விடுபட்டு, அனைத்து இனங்களையும் சமமாக மதிக்கும் புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கி நகர வேண்டியது அவசியமாகும்.
எமது இளம் தலைமுறை உணர்ந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்..
“பிரிவினையும் இனவாதமும் சிலரின் அரசியல் வாழ்வாதாரமாக இருக்கலாம்; ஆனால், ஒற்றுமையும் நேர்மையான அரசியலுமே எமது எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை தீர்மானிக்கும்.”
குறுகிய கால அரசியல் இலாபங்களுக்காக பரப்பப்படும் பிரிவினைச் சிந்தனைகளையும் நச்சுப் பிரசாரங்களையும் புறந்தள்ளி, உண்மை, நல்லாட்சி, சமூக நீதி மற்றும் தேசிய ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் மாற்றத்திற்காக இளம் தலைமுறை விழிப்புடனும் பொறுப்புடனும் பயணிக்க வேண்டிய காலம் இதுவாகும்.



