புனித மக்கமா நகரில் உள்ள எமது அறக்கட்டளை இலங்கை இல்லம்!

✍🏻 மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
இலங்கையில் இருந்து கப்பல் மூலம் பயணித்து வரும் வசதி குறைந்த ஹஜ் யாத்திரகர்கள் தங்குவதற்காக 1964 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம் தனவந்தர்கள் குழு ஒன்று அங்கு சென்று புனித ஹரம் ஷரீஃபிற்கு அருகல் மிஸ்பஃலா என்ற இடத்தில் இப்றாஹீம் கலீல் வீதியில் மூன்று மாடிகளைக் கொண்ட ஒரு கட்டதைதை வாங்கி வக்ஃப் செய்தார்கள்.
சவூதி அரேபிய வக்ஃப் சட்டங்களின்படி அதை நிர்வகிப்பதற்காக அஸ்ஸய்யித் உமர் வலி எனும் ஸவூதிப் பிரஜை அறங்காவலராக நியமிக்கப்பட்டார், ஹஜ் யாத்திரை காலங்கள் தவிர்த்து அந்த பிரதேசத்தில் வாழும் சிறார்கள் அல்குர்ஆன் கற்பதற்காக அந்த இடம் வழங்கப்பட வேண்டும் என மற்றுமொரு நோக்கமும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
காலப் போக்கில் அதன் அறங்காவலர் வக்ஃப் செய்யப்பட்ட நோக்கங்களுக்கு புறம்பாக அதனை வாடகைக்கு விட்டு வருவாயை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார், இலங்கை ஹஜ் குழு மருத்துவ சேவைகளுக்காகவும் அதிகாரிகள் தங்குவதற்காகவும் அவரிடம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையும் இருந்தது.
ஸவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர்கள், ஜித்தாவிற்கான கொன்ஸல் ஜெனரல்கள் என பலரும் மேற்படி இலங்கை இல்லத்தை மீட்டு முறையாக அறக்கட்டளையை நிர்வகிப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த அடிப்படையில் ஸவூதி பிரஜா உரிமை பெற்ற இலங்கைப் பிரஜையான அல்ஹாஜ் ஸாதிஹான் அவர்களுக்கு ஹஜ்கால சேவைகளை உத்தியோகபூர்வம்க வழங்குவதற்கான சில அதிகாரங்களையும் இலங்கை இல்லத்தை சட்டரீதியாக மீட்டெடுப்பதற்கான ஆவணங்களையும் வழங்கி இருந்தனர்.
அறங்காவலர் உமர்வலி அவர்கள் தனக்குப் பின் தனது மகன் ஹம்ஸா உமர்வலியை நியமித்திருந்தமை குறிப்பிடத் தக்கது, ஸவூதி இலங்கைப் பிரஜை ஸாதிக் ஹாஜியார் அவர்கள் ம்காவில் உள்ள நீதிமன்றத்தில் பல வருடங்களாக தன்னார்வ அடிப்படையில் வழக்காடி வந்தமை குறிப்பிடத் தக்கது.
2005 ஆம் ஆண்டு புனித ஹரம் விஸ்தரிப்பிற்காக இலங்கை இல்லம் அகற்றப்பட அறிவித்தல் தரப்பட்ட நிலையில் அதற்கான இழப்பீட்டை முறையாக பெற்று மாற்று இடத்தை வாங்குவதற்கும் முறையாக நிர்வகிப்பதற்கும் மக்கா இல்லம் தொடர்பிலான வழக்கினை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது ஜித்தாவில் கொன்ஸல் ஜெனரலாக பணியாற்றிய நானும் அதற்கு முன்னர் அமைச்சர்கள் தூதுவர்கள் மேற் கொண்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து வெளிவிவகார அமைச்சிற்கு ஒரு அறிக்கை சமர்பித்தேன்.
அதன்படி அந்த அறக்கட்டளையின் ஸ்தாபக உறுப்பினர்களின் வாரிசுகளைத் தேடி சில சட்ட ஆவணங்களை தயாரித்து மேற்படி இலங்கை இல்லத்தை மீட்பதற்கான சட்ட அதிகாரத்தை இலங்கை முஸ்லிம் சமய கலாசார விவகாரத் திணைக்களம், ஸவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம் என்பவற்றிற்கு உடனடியாக பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
அன்று ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி ஆளுநர் மர்ஹூம் அலவி மெளலானா, மர்ஹும் ஏ.எச்.எம் அஸ்வர் ஆகியோர் மூலம் ஜனாதிபதியின் கவனத்திற்கும் விடயத்தை கொண்டு வந்தோம்.
அதன்படி ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் சட்டத்தரணி யூஸுப் நஸார் உட்பட சில சிரேஷ்ட சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு ரியாதில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமன ஆவணங்கள் வெளிவிவகார அமைச்சினூடாக அனுப்பப்பட்டு அது ஸவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் அல்ஹாஜ் 2008 ஆம் ஆண்டு ஸாதிக் ஹாஜியார் அவர்களை இலங்கை இல்லத்தின் அறங்காவலராக சிபாரிசு செய்து மக்கா நீதிமன்றத்தில் வழக்கை துரிதப்படுத்தி இழப்பீட்டை பெறுவதற்கான அதிகாரங்களும் அவருக்கே வழங்கப்பட்டன
அல்ஹம்து லில்லாஹ், 2010 ஆம் ஆண்டு இலங்கை இல்லம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு எமக்கு சாதகமாக வழங்கப்பட்டது, 2012 ஆம் ஆண்டு ஹரம் ஷரீஃப் விஸ்தீரணத்திற்காக அது அகற்ப்பட்ட போது அதற்கான இழப்பீட்டை அல்ஹாஜ் ஸாதிஹான் அவர்கள் அறக்கட்டளை சார்பாக பெற்று மக்காவில் அஸீஸிய்யா என்ற இடத்திலும் பத்தா குறைஷ் என்ற இடத்திலும் இரண்டு கட்டடங்களை வாங்கி தற்போது அதனை நிர்வகித்து வருகிறார்.
ரியாதில் உள்ள இலங்கை தூதரகம், ஜித்தாவில் உள்ள கொன்ஸல் ஜெனரல் காரியாலயம், இலங்கை முஸ்லிம் சமய கலாசார விவகாரத் திணைக்களம் என்பவற்றின் உத்தியோகபூர்வமான பின்புலத்தில் தன்னார்வ அடிப்படையில் அல்ஹாஜ் ஸாதிஹான் அவர்கள் மேற்படி அறக்கட்டளையை மீடாபதற்கான போராட்டத்தை மேற் கொள்ளாது இருந்திருந்தால் அதனை அதன் முன்னாள் அறங்காவலர் உமர் வலி குடும்பத்தினர் கையகப்படுத்தி இருப்பர், அல்லது வழக்கு நிறைவுறாது இருந்திருந்தால் சவூதி அரேபிய பொது அறக்கட்டளைக்கு அல்லது ஹரம் ஷரீஃப் அறக்கட்டளைக்கு சுவீகரிக்கப்பட்டிருக்க இடமிருந்தது.
அல்ஹம்து லில்லாஹ், மேற்படி அறக்கட்டளையை ஸவூதி அரேபிய வக்ஃப் சட்டங்களுக்கு ஏற்ப அதன் புதிய அறக்கட்டளை உறுப்பினர்களை நியமித்து ஸவூதி பிரஜை அல்ஹாஜ் ஸாதிஹான் அவர்களது ஒத்துழைப்புடன் நிர்வகிப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை துரிதமாக செய்து முடிக்க வேண்டிய தேவை இருக்கிறது, அல்ஹாஜ் ஸாதிஹான் கடந்த பல வருடங்களாக இலங்கை அதிகாரிகளிடமும் என்னிடமும் மேற்படி விவகாரத்தை துரிதப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
தற்போது அங்கு தூதுவராக கடமை புரியும் சட்டத்துறை பட்டதாரி அமீர் அஜ்வார்ட் அவர்கள் இது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக அறிய வருகிறது, அதேவேளை தற்போது ஜித்தாவில் இலங்கைக்கான கொன்ஸல் ஜெனரலாக பணிபுரியும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி ழபர் தாஹிர் அவர்களும் ஒரு சிறந்த சட்ட வல்லுநராக இருப்பதால் மேற்படி விவகாரத்தை ஆராய்ந்து கால தாமதமின்றி நடவடிக்கைகளை மேற்கொள்வர் என எதிர்பார்க்கிறோம்.
*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
முன்னாள் இலங்கை கொன்ஸல் ஜெனரல் – ஜித்தா
22.08.2026





