இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த வாரம் இலங்கைக்கு வருகிறார்.
அதற்கமைய, அவர் எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கு வருகை தரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர், அன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு கொழும்பில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) விரைவாக அமல்படுத்துமாறு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சராக அவர் மேற்கொள்ளும் இந்த முதல் விஜயத்தின் போது, பாதுகாப்பு அமைச்சைத் தன்வசம் வைத்துள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் சமீபத்திய இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து இடம்பெறும் இந்த விஜயம், இரு நாட்டுத் தலைவர்களாலும் முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்ட முக்கிய திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான இந்திய அரசின் தொடர் முயற்சியின் ஒரு அங்கமாகும்.
மின் கட்டமைப்பு இணைப்புத் திட்டம், சம்பூர் சூரிய மின்சக்தித் திட்டம், திருகோணமலையை ஆற்றல் மையமாக (Energy Hub) அபிவிருத்தி செய்தல், இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டம் (SLUDI) மற்றும் காங்கேசன்துறை துறைமுக நவீனமயமாக்கல் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து இந்த சந்திப்புகளின் போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக கூறப்படுகிறது..



