News

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிக்கு இடமளிக்க வேண்டாம் ;

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிக்கு இடமளிக்க வேண்டாம் எனக் கோரி, முன்னணி சோசலிசக் கட்சி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் கடிதம் ஒன்றை கையளித்தது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களினால் நேற்று (02) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2026 ஆம் ஆண்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்ததாக இருந்தமையினால், எதிர்பார்த்த அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போயுள்ளது. அதேவேளை, விலை மனு கோரல் நடைமுறைகளில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக நிலக்கரி இருப்புகளும் முடிவடையும் நிலையை எட்டியுள்ளன. கூரை மீதான சூரிய மின்சக்தி அமைப்புகளை ஊக்குவிப்பதை முடக்கும் வகையில் அரசாங்கம் எடுத்த தீர்மானத்தினால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் அந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதும் சிக்கலாக மாறியுள்ளது.

இந்நிலைமையில், எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. ஆனால், மின்சார உற்பத்திக்கு வழங்கி வந்த எரிபொருள் மானியம் இந்த மாதத்துடன் நிறைவடைகின்றது. அத்துடன், மின் உற்பத்திக்கு வழங்கப்படும் நெப்தா மற்றும் எரிபூர்ண எண்ணெய் ஆகியவற்றின் விலைகளை பாரிய சதவீதத்தால் உயர்த்துவதற்கு இலங்கை கனிமவள கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில், மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எங்களுக்குத் தெரியவருகின்றதுடன், அமைப்பு கட்டுப்பாட்டு நிறுவனம் அந்த கோரிக்கையை விரைவில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் தொடர்ச்சியாக பணவீக்க விகிதம் 5 முதல் 7 சதவீதம் வரை அதிகரித்ததுடன், ஓகஸ்ட் மாதத்தில் அந்த பெறுமதி 8 சதவீதமாக பதிவாகியுள்ளது.

வருமானம் அதிகரிக்காமல் செலவுகள் அதிகரிக்கும் சூழ்நிலையில் மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறான நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் நுகர்வோர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே, மின் நுகர்வோரின் உரிமைகளுக்காக சட்டபூர்வமாக நிறுவப்பட்ட ஒரு நிறுவனம் என்ற ரீதியில், இத்தகைய கோரிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டாம்

கடந்த காலத்தில் எரிபொருள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதற்கான செலவு தொடர்பான புள்ளிவிவரங்கள் சந்தேகத்துக்கு இடமாக உள்ளதால், அது குறித்து முழுமையான தணிக்கை ஒன்றை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். தரம் குறைந்த நிலக்கரியினால் ஏற்பட்ட நஷ்டத்தை நுகர்வோர் மீது சுமத்த வேண்டாம் என ஆணைக்குழு தீர்மானித்துள்ள போதிலும், எரிபொருள் மின் உற்பத்திக்கான செலவு வடிவில் அது நுகர்வோரிடமிருந்து அறவிடப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இலங்கை கனிமவள கூட்டுத்தாபனம் திடீரென நெப்தா மற்றும் எரிபூர்ண எண்ணெய் விலைகளை உயர்த்தியமைக்கு நியாயமான காரணங்கள் உள்ளதா என்பதை ஆராய வேண்டும். மின்சார உற்பத்திக்கு வழங்கப்படும் எரிபொருள் மானியத்தை மேலும் சில மாதங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க வேண்டும்.

நிலக்கரி இருப்புக்கள் இவ்வளவு விரைவாக முடிவடைந்து, இரு நிலக்கரி கப்பல்கள் வரையில் பற்றாக்குறை ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். கூரை மீதான சூரிய மின்சக்தி அமைப்புகளை முடக்கும் தீர்மானத்தின் பின்னணியில் ஏதேனும் இலஞ்சம் அல்லது ஊழல் உள்ளதா என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும்.

மேலும், எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் செலவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கோரும் நடவடிக்கையின் தற்போதைய முன்னேற்றம் குறித்த அறிக்கையை வழங்குமாறும் ஆணைக்குழுவிடம் வலியுறுத்துகிறோம் என அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button