News

சிறிய சிறிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட இந்திய பாதுகாப்பு அமைச்சர் வரமாட்டார் – உண்மையான ஒப்பந்தங்களை வெளிப்படுத்துங்கள்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு விஜயம் செய்தது, அரசாங்கம் கூறுவது போன்று சில சிறிய மற்றும் சாதாரண ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக அல்ல. எனவே, அரசாங்கம் மக்களிடமிருந்து மறைத்து வைத்துள்ள உண்மையான ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாடுகள் என்ன என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தின் போது கேடட் பயிற்சி பரிமாற்றம், பாதுகாப்புப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களைப் பராமரித்தல் தொடர்பாக மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால், இவ்வாறான சிறிய அளவிலான ஒப்பந்தங்கள் பொதுவாக அமைச்சு மட்டத்திலுள்ள கீழ்நிலை அதிகாரிகளாலேயே கையெழுத்திடப்படுபவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றுப் பின்னணியை சுட்டிக்காட்டிய அவர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இதற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்தது 38 ஆண்டுகளுக்கு முன்னர், 1988ஆம் ஆண்டில், 1987 இந்திய–இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது எனத் தெரிவித்தார்.

அத்தகைய நிலையில் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வந்து பள்ளி மாணவர்களின் கேடட் பயிற்சி அல்லது ஆயுதப் பராமரிப்பு போன்ற விடயங்களை மட்டுமே கலந்துரையாடினார் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

மேலும், 2025 ஜனவரியில் ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஏற்பட்ட உடன்பாடுகள் மற்றும் 2025 ஏப்ரல் 5ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்தபோது கையெழுத்திடப்பட்ட ஏழு ஒப்பந்தங்களின் பிரதிகள் இதுவரை மக்களுக்கு வெளியிடப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய ஊடகங்களில், முன்னர் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உத்தியோகபூர்வ சட்டபூர்வ ஒப்பந்தமாக மாற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருவதாக செய்திகள் வெளியாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மக்களிடமிருந்து மறைத்து மேற்கொள்வதாக குற்றம் சாட்டிய புபுது ஜயகொட, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உண்மையில் பேசப்பட்ட விடயங்கள், ஏற்படுத்தப்பட்ட இரகசிய உடன்பாடுகள் மற்றும் கையெழுத்திடப்பட்ட உண்மையான ஒப்பந்தங்கள் என்ன என்பதை உடனடியாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

Recent Articles

Back to top button