ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சபாநாயகர் வேண்டாம்.. காலாநிதி சான்றிதழ் இல்லாவிட்டாலும் ரன்வல வரவும்.. – நாடாளுமன்றத்தில் அமளி
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை குறித்து நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்க எதிர்க்கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமையால், நாடாளுமன்றச் சபையில் பெரும் பதற்றமான நிலை ஏற்பட்டது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, சபாநாயகருக்கு எதிரான இந்த இலஞ்ச ஊழல் விசாரணை தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட சிறப்புரிமைப் பிரச்சினையைச் சபையில் சமர்ப்பிக்க முயன்றபோதே இந்த அமளி தொடங்கியது.
அங்கு பாராளுமன்ற உறுப்பினரின் உர குறுக்கிட்ட சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன, அன்றைய நிகழ்ச்சி நிரலுக்குப் புறம்பான விடயங்கள் குறித்துப் பேச இடமளிக்க முடியாது என்றும், உரிய தலைப்பின்கீழ் மட்டுமே கருத்துக்களைத் தெரிவிக்குமாறும் கூறினார். இல்லையெனில் உரையை நிறுத்த வேண்டிவரும் என்றும் சபாநாயகர் எச்சரித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்த தயாசிறி ஜெயசேகர, சபாநாயகருக்கு எதிரான இலஞ்ச ஊழல் விசாரணை குறித்து அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ள பின்னணியில், அது குறித்துக் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிக்கு முழு உரிமை உண்டு எனச் சுட்டிக்காட்டினார்.
“விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் உங்களால் அந்தச் நாற்காலியில் அமர்ந்திருக்க முடியாது. இதைக் கேட்டுக்கொண்டிருக்க முடியாவிட்டால், பிரதிச் சபாநாயகரிடம் நாற்காலியைக் ஒப்படைத்துவிட்டு வெளியே செல்லுங்கள்” என தயாசிறி ஜெயசேகர நேரடியாகச் சபாநாயகரிடம் கூறினார்.
அதன்பின்னர், பிரதிச் சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலியைப் பேசுமாறு சபாநாயகர் அறிவித்ததையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து “வெட்கக்கேடு… வெட்கக்கேடு…” எனக் கோஷமிட்டு கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சபாநாயகருக்கு எதிராக இவ்வாறான விசாரணை இடம்பெறும் வேளையில் அவர் அப்பதவியில் தொடர்வது ஒழுக்கநெறியல்ல என்றும், விசாரணைகளின் சுயாதீனத்தன்மைக்கு இடமளித்து அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை என அரசாங்க மேடைகளில் கூறினாலும், நாடாளுமன்றத்திற்குள் சபாநாயகர் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி கொள்கைகளை மதித்து, தேவைப்பட்டால் மருத்துவருமான பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலியிடம் சபாநாயகர் பதவியை ஒப்படைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
பட்டச் சான்றிதழ் இல்லாவிட்டாலும் அசோக்க ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்திருக்க முடியும் என்றும், சான்றிதழ் தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

