எமது இனத்தை அழித்தொழிக்க நினைத்தவர்களை இன்று கர்மா விரட்டத் தொடங்கியுள்ளது – கோட்டாபய ராஜபக்சவையையும் உடனடியாக கைது செய்யவும் ; செல்வம் அடைக்கலநாதன் MP

எமது இனத்தை அழித்தொழிக்க நினைத்தவர்களின் செயற்பாடுகளினால் எமது மக்கள் அடைந்த அவலக் குரல், செம்மணியில் மக்களைப் புதைக்கும் போது அவர்கள் பட்ட வேதனைகள், முள்ளிவாய்க்காலில் தாய், தந்தை கண் முன்னே சூடுபட்டு வீழ்கின்ற போது அந்த மக்களின் அழுகுரல் இன்று கர்மா என்ற ரீதியில் விரட்டத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்தார் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன். அத்துடன், சந்தேக நபரான கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்வதில் ஏன் தாமதமானது என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) அன்று இடம்பெற்ற பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்,
“பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரியை நீக்குவதற்கான விவாதத்தில், இது இராணுவ விடயம் என்பதனால் நான் எனது கருத்துக்களைக் கூறாவிட்டாலும், இந்தப் பதவிக்குரியவருக்கு வெளிநாடுகள் வருவதற்கான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் இந்தப் பதவி அவருக்குத் தகுதியற்றது என்ற ரீதியில் இந்த விவாதம் பிரயோசனமானது என்பதைக் குறிப்பிடுகின்றேன்.
இதேவேளை, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில், எமது காணாமல் போனவர்கள், எமது இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் செம்மணி புதைகுழி போன்ற விடயங்களில் விசாரணை நடத்தப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் தனது கருட்டை வெளியிட்டுள்ளார். ஐ.நா.வும் இலங்கை அரசாங்கத்திற்கு உரிய செயற்பாடுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். அத்துடன், உள்ளக விசாரணையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனையும் கூறிக்கொள்கின்றோம்.
கடந்த காலங்களில் 25 வருடங்களுக்கும் மேலாக அரசியல் கைதிகள் இருக்கின்றனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாகப் போராளிகளின் படங்களை வைத்திருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இன்றும் சிறையில் வாடுகின்றனர். எங்களுடைய தாய், தந்தை உறவுகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பது இன்று மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு உணர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், அவர்கள் கடந்த காலங்களில் எங்களுடைய இனத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் வெற்றிவாகை சூடியவர்களாக இருந்தாலும், அந்தத் தாய், தந்தையர்களின் உணர்வு எப்படி இருக்கும் என்பது தற்போது இவர்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைக்கின்றோம். ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்படுபவர்கள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் யார், எவரென்று பார்க்காமல் நீங்கள் உங்களின் கைதுகளைச் செய்ய வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பல சந்தேக நபர்கள் இருக்கின்றனர்; அவர்களை ஏன் கைது செய்யாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்? எமது இனத்தை இல்லாதொழிக்க நினைத்த, மனித உரிமைகளை மீறியவர்களாகக் கருதப்படுபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு, நாட்டின் பொருளாதாரத்தைக் கீழே கொண்டு சென்றவர்களாக ராஜபக்சர்களை நீதிமன்றம் கூறியுள்ளது. சந்தேக நபரான கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்வதில் ஏன் தாமதமானது என்று தெரியவில்லை? மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம். இந்த விசாரணைகளைச் சர்வதேச அனுசரணையுடன் முன்னெடுக்க வேண்டும்.
இதேவேளை, கர்மா என்பதனை நான் நம்புவதில்லை; ஆனால், கர்மா என்பது இருக்கின்றது என்பதனை உணரக்கூடியதாக உள்ளது. எமது இனத்தை அழித்தொழிக்க நினைத்தவர்கள், எமது மக்களின் அவலக் குரல், செம்மணியில் மக்களைப் புதைக்கும் போது அவர்கள் பட்ட வேதனைகள், முள்ளிவாய்க்காலில் தாய், தந்தை கண் முன்னே சூடுபட்டு வீழ்கின்ற போது அந்த மக்களின் அழுகுரல் இன்று கர்மா என்ற ரீதியில் செயற்படத் தொடங்கியுள்ளது. தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த வகையில் அரசாங்கம் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற போது எமது ஆதரவு இருக்கும் என்பதனை கூறிக்கொள்கின்றோம் என்றார்.



