விமானமொன்றைக் கொள்வனவு செய்யும் போது கொமிசன் பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் – பெற்றுக்கொள்ள மறுத்தால் விமானக் கொள்வனவு ஒப்பந்தமும் ரத்துச் செய்யப்படும் ; பேராசிரியர் சோனால் பெர்னாண்டோ

விமானமொன்றைக் கொள்வனவு செய்யும் போது அதன் விலையுடனேயே வாங்குபவருக்கு வழங்கப்பட வேண்டிய தரகர் ஊதியமும் (கொமிஸ்) உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஊதியத்தைப் பெற்றுக்கொள்வதை மறுத்தால் விமானக் கொள்வனவு ஒப்பந்தமும் ரத்துச் செய்யப்படும் என்றும் பேராசிரியர் சோனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அவர் கட்டுநாயக்க ஏய்போர்ட் கார்டன் ஹோட்டலில் புதன்கிழமை 09ஆம் திகதி காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார்.
அதற்கமைய, விமான விற்பனை நிறுவனத்தால் வழங்கப்படும் அந்த ஊதியத்தை வாங்குபவர் கட்டாயமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
பேராசிரியர் சோனால் பெர்னாண்டோ கடந்த அரசாங்க காலத்தில், கட்டுநாயக்க விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகக் கடமையாற்றியவராவார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சோனால் பெர்னாண்டோ, விமானமொன்றைக் கொள்வனவு செய்வதற்காக அந்த விமான உற்பத்தி நிறுவனத்தையோ, அதன் பிரதிநிதி நிறுவனத்தையோ அல்லது தரகர் ஒருவரையோ நாட முடியும் என்றாலும், தரகர் ஒருவர் அல்லது பிரதிநிதி நிறுவனம் மூலம் கொள்வனவு செய்வதே மிகவும் லாபகரமானது எனவும், எவ்வாறாயினும் விமானச் சந்தை ஒரு மாஃபியா போன்று செயல்படுவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை தனது விமானக் குழமத்திற்காக அதிநவீன ஏர்பஸ் A-350 வகைத் விமானங்களைக் கொள்வனவு செய்வது முட்டாள்தனமான முடிவு எனவும், எனவே தனது சேவை காலத்தில் அவ்வாறு கொள்வனவு செய்யத் தயாரான ஏர்பஸ் ஒப்பந்தத்தை கடந்த அரசாங்கம் ரத்துச் செய்தது எனவும் அவர் கூறினார்.
அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தை நவீனமயமாக்குவதும் விஸ்தரிப்பதும் செய்யப்படக் கூடாது எனவும், அது மேலும் 25 ஆண்டுகளுக்குப் போதுமானது எனவும் பேராசிரியர் சோனால் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.


