வெளிநாடுகளில் பணிபுரியும் போது உயிரிழக்கும் (பதிவுசெய்யப்பட்ட) இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் பயனாளிகளுக்கும் 20 இலட்ச ரூபா வழங்கப்படும் – வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இன்று முதல் வழங்கத் தொடங்கியது

வெளிநாடுகளில் பணிபுரியும் போது உயிரிழக்கும் பதிவுசெய்யப்பட்ட இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் பயனாளிகளுக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் (SLBFE) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டத்தின் கீழ் 2 மில்லியன் ரூபாய் வரை மரண நஷ்டஈடு வழங்கப்படும்.
தற்போதுள்ள காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தகுதியுடைய பயனாளிகள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ. 600,000 பெறுகின்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தனது புலம்பெயர் தொழிலாளர் நல நிதியத்தின் மூலம் மேலும் ரூ. 1.4 மில்லியனை வழங்கி, மொத்த நஷ்டஈட்டுத் தொகையை 2 மில்லியன் ரூபாயாக உயர்த்தும்.
புதிய திட்டத்தின் கீழ் முதலாவது கொடுப்பனவுகள் வியாழக்கிழமை (10) வழங்கப்பட்டதுடன், உயிரிழந்த 50 புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் பயனாளிகளுக்கும் மேலதிக நஷ்டஈடாக 70 மில்லியன் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டன.
வெளிப்பணி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் அறிவுறுத்தலின் பேரிலும், வெளிப்பணி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் மேற்பார்வையிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
2025 ஜூன் 25 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ நிகழும் பதிவுசெய்யப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் தகுதியான மரணங்களுக்கு இந்த மேலதிக நஷ்டஈடு பொருந்தும்.
தற்போதுள்ள நஷ்டஈட்டுத் திட்டத்தை மீளாய்வு செய்த பின்னரே இந்த தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் மரணத்திற்குப் பின்னர் குடும்பங்கள் எதிர்நோக்கும் நிதி மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ரூ. 600,000 கொடுப்பனவு போதுமானதாக இல்லை என அம்மீளாய்வில் கண்டறியப்பட்டது.
புலம்பெயர் தொழிலாளர்கள் அல்லது ஆட்சேர்ப்பு முகவர்களால் செலுத்தப்படும் கூடுதல் காப்பீட்டுக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. எனினும், இறுதியாக மேலதிக ரூ. 1.4 மில்லியனை புலம்பெயர் தொழிலாளர் நல நிதியத்தின் மூலமே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பதிவான மரண நஷ்டஈட்டுக் கோரிக்கைகளின் அடிப்படையில், இந்த மேலதிக நஷ்டஈட்டுச் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு ஆண்டுதோறும் சுமார் 231 மில்லியன் ரூபாய் தேவைப்படும் என பணியகம் மதிப்பிட்டுள்ளது.
பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாக புலம்பெயர் தொழிலாளர் நல நிதியத்தின் ஊடாக இக்கொடுப்பனவுகளை வழங்குவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சபை அனுமதி அளித்துள்ளது.
இந்த விசேட நஷ்டஈடு வழங்கும் நிகழ்வில் அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, அமைச்சின் செயலாளர், அமைச்சின் மேலதிக செயலாளர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர், பொது முகாமையாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளும் அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன், நிதிப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.



