News

வெளிநாட்டு நிறுவனங்களின் எரிபொருள் விலை நெருக்கடி இராஜதந்திர பிரச்சினையாக மாறுகிறது.. டீசல் விநியோகம் நிறுத்தம்.. பெட்ரோல் விநியோகம் கட்டுப்பாடு..

இலங்கையில் எரிபொருளை விநியோகிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், எரிபொருள் விலையை உயர்த்துமாறு கோரியிருந்த போதிலும், அதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சச்சிடமிருந்து இதுவரை சாதகமான பதில் கிடைக்காததால், ஏற்பட்டுள்ள நிலைமை ஒரு இராஜதந்திர பிரச்சினையாக உருவெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் முன்னணி எரிபொருள் நிறுவனமான லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் (LIOC), சீனாவின் சினோபெக் (Sinopec) நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks) ஆகிய நிறுவனங்கள், சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் டீசல் விலையை உயர்த்துமாறு அமைச்சச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

ஒரு லிட்டர் டீசலுக்கு சுமார் 170 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டி அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தனர்.

அதற்கு சரியான தீர்வு கிடைக்காததால், அந்நிறுவனங்கள் தற்போது இலங்கைக்கு டீசல் விநியோகிப்பதை முற்றாக நிறுத்தியுள்ளதோடு, பெட்ரோல் விநியோகத்தையும் கட்டுப்படுத்தியுள்ளன.

இதற்கிடையில், இந்த நிலைமை குறித்து இந்தியன் ஆயில் நிறுவனமும், சினோபெக் நிறுவனமும் கொழும்பிலுள்ள தத்தமது நாடுகளின் தூதரகங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,அத்தூதரகங்கள் இது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கேட்கத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்வை வழங்குவதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (CPC) நிர்வாக இயக்குநர் கலாநிதி மயூர நெத்திகுமார் தெரிவிக்கையில், எரிபொருள் விலையை உயர்த்துவது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றாலும், வெளிநாட்டு நிறுவனங்களின் கோரிக்கை குறித்து அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்கள் டீசல் விநியோகத்தை நிறுத்தி, பெட்ரோல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதை கனிம எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாட்டொட்டுன்னவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தொடர்ந்து டீசல் விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

ஆனால், இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இல்லாத சில தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக பல கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Recent Articles

Back to top button