News

நீதிமன்றத்தில்  அறிக்கை  வெளியிடப்பட்ட பின்னரே திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டது – LTTE இலங்கையில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம், அதன் கொடி, சின்னம் போன்றவற்றை காட்சிப்படுத்தவும் முடியாது ; அமைச்சரவை பேச்சாளர்

திலீபனின் உருவச்சிலை தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து


யாழ்ப்பாணம், நல்லூரிலுள்ள திலீபன் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் இராசையா பார்த்திபன் (திலீபன்) என்பவரின் உருவச்சிலை, உரிய நீதிமன்றத்தில்  அறிக்கை செய்யப்பட்ட பின்னரே அகற்றப்பட்டதாக அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பொலிஸாரால் நீதிமன்றத்தில்  அறிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தச் சிலை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த காலங்களில் செப்டம்பர் மாதத்தில் வடக்கில் திலீபனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்த போதிலும், சிலை ஒன்று வைக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.


“இம்முறை சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது. எல்.ரி.ரி.ஈ (LTTE) அமைப்பு தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கமாகும். தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை விளம்பரப்படுத்துவதற்கு நமது நாட்டின் சட்டங்கள் இடமளிப்பதில்லை.

இதுபோன்ற செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிலையை அகற்றுவதற்கு முன்னர் பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. எடுக்கப்பட்ட நடவடிக்கை இதுவே,” என அவர் விளக்கமளித்தார்.


நாட்டில் அவ்வப்போது இனமுரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எனினும் அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளைப் பொறுத்துக்கொள்ளாது சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.


யாழ்ப்பாணம், நல்லூர் திலீபன் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


திலீபனின் 39 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் குறித்த இடத்தில் நிறைவடைந்த மறுநாள், அதாவது ஞாயிற்றுக்கிழமை (27) பொலிஸாரால் இந்தச் சிலை அகற்றப்பட்டது.


இந்திய அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து, 1987 செப்டம்பர் மாதம் நல்லூரில் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து திலீபன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button