சிறுவர் மற்றும் வயோதிபர் தினத்தில் கன்னத்தில் அறைந்தாற் போல் அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது – அரசாங்கம் 220 இலட்சம் மக்களையும் ஏமாற்றி முட்டாளாக்கி விட்டது ; சஜித்

சர்வதேச சிறுவர் மற்றும் வயோதிபர் தினத்தன்று, அரசாங்கம் பொதுமக்களின் கன்னத்தில் அறைந்தாற் போல் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாக நாமனைவரும் சர்வதேச சிறுவர் மற்றும் சர்வதேச வயோதிபர் தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், பாதுகாப்பான தேசத்திற்குள் பச்சிளம் குழந்தைகள், சிறார்கள், இளம் சந்ததியினர் மற்றும் வயோதிபர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பிரஜைகளுக்கும் பாதுகாப்பான, வளமான மற்றும் பக்க பலத்தை கொடுக்கும் வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
சர்வதேச சிறுவர் மற்றும் வயோதிபர் தினம் உதயமாகுவதற்கு சில நொடிப்பொழுதுகள் இருக்கும் நிலையில், தற்போதைய அரசாங்கம் சிறார்கள், வயோதிபர்கள் மற்றும் ஒட்டுமொத்த பிரஜைகளினதும் கன்னத்தில் அறைந்தாற் போல் எரிபொருட்களினது விலைகளை கூட்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) விசேட கூற்றை முன்வைத்து தெரிவித்தார்.
அன்று ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றவும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறவும், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைப் பெறவும், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பிரதிநிதிகள் துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே எரிபொருட்களைப் பெற்றுத் தருவோம் என்று பிரஸ்தாபித்தனர்.
எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் நீக்கப்பட்டு, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து திறைசேரிக்கு வழங்கப்படும் பணத்தை நிறுத்தப்பட்டு, ஊழல், மோசடி மற்றும் கமிஷன் தொகைகள் ஒழிக்கப்பட்டு, துறைமுகத்தில் இறக்கப்படும் அதே விலையிலேயே எரிபொருட்களை மக்களுக்கு பெற்றுத் தருவோம் என்றனர். ஆனால் இன்று அந்த வாக்குறுதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் நாட்டிற்கும் மக்களுக்கும் அப்பட்டமான பொய்களைச் சொல்லி அரசியலை முன்னெடுத்து, 220 இலட்சம் மக்களையும் ஏமாற்றி விட்டது. பொய்யான விடயங்களை அறிவித்து மக்களை முட்டாள்களாக்கியுள்ளது.
பல பில்லியன்களை ஒதுக்கி கிட்டிய மாதங்களில் எரிபொருள் மானியங்களைப் பெற்றுத் தருவோம் என்று ஜனாதிபதி அண்மையில் பிரஸ்தாபித்திருந்தார். அவ்வாறு பார்த்தால் இந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி பொய்யைத் தான் அள்ளி கொட்டியுள்ளார்.
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் எரிபொருள் விலைகள் கூட்டப்பட்டுள்ளன. பேரணிகளில் உரையாற்றும் போது எரிபொருட்களின் விலைகளை மானிய முறையில் பெற்றுத் தருவோம் என்று கூறிவிட்டு, இவ்வாறு எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இந்த மாணியம் எப்போது வழங்கி வைக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
இனிமேலாவது இந்த அப்பட்டமான பொய்யுரைக்கும் அரசியலில் இருந்து விடிபட்டு, நாட்டு மக்களுக்கு உண்மைகளைச் சொல்லி, அவர்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பெரும்பாலான பணம் திறைசேரியில் சேமிக்கப்பட்டிருந்தால், அந்தப் பணத்தைப் பயன்படுத்தி சாதாரண மக்கள், இயலாத மக்களுக்கு ஏன் நிவாரணம் பெற்றுக் கொடுக்க முடியாது என்று கேள்வி எழுப்புகிறேன். பொய்யுரைக்கும் பேச்சுக்களை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித்
தலைவர் இதன்போது மேலும் தெரிவித்தார்



