விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்ற துணை விமானி ஓமன் நாட்டவர் ; இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர்
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற flydubai விமானத்தின் கேப்டன் ஸ்மித் மச்சார் (Smit Machchhar) மீது கத்தியால் தாக்குதல் நடத்தி, விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்ற துணை விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் (Gideon Sa’ar) தெரிவித்துள்ளார்.
NDTV-க்கு வழங்கிய பேட்டியில்,
இந்தச் சம்பவத்தை அவர் “ஜிஹாதிய பயங்கரவாதத் தாக்குதல்” எனக் குறிப்பிட்டார். இருப்பினும், இதற்கான முழுமையான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் இஸ்ரேல்–ஐக்கிய அரபு அமீரக உறவுகளையும் Abraham Accords ஒப்பந்தத்தையும் பாதிப்பதாக இருக்கலாம் என சார் கூறினார்.
தாக்குதலுக்குப் பின்னரும் காயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார், விமானத்தின் காக்பிட் கதவைத் திறக்க முடிந்ததால் பயணிகளும் மற்ற விமானப் பணியாளர்களும் உள்ளே சென்று தாக்குதல் நடத்திய துணை விமானியை கட்டுப்படுத்த முடிந்தது.
விமானத்தில் இருந்த மேலும் இரண்டு விமானிகள் பின்னர் விமானத்தின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டனர். விமானம் இறுதியில் சவுதி அரேபியாவின் தபூக் பகுதியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
தாக்குதல் நடத்தியவர் தொடர்பான முழுமையான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை சவுதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தால் வெளியிடப்படவில்லை. முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் அவர் UAE அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர், “இந்தத் தாக்குதலின் பின்னால் யார் இருந்தார்கள் என்பது குறித்து போதுமான தகவல்கள் எங்களிடம் இன்னும் இல்லை; விசாரணையின் மூலம் கண்டறிவோம்” என்றும் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு தொடர்பு இருப்பதாகவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.



